கமலஹாசனை நவீன நாஸ்ட்ரடாமஸ் என்று அவர் ரசிகர்கள் பிரஸ்தாபிப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர் தென்காசிக்குக் குடும்பத்துடன் தியானத்திற்குப் போன நேரத்தில்தான், தமிழர்களின் சொற்களஞ்சியத்தில் அந்த வார்த்தை சற்றுக் கூடுதல் அழுத்தத்துடன் வந்து அமர்ந்துகொண்டது.
இரு தசாப்தங்கள் முன்புவரையிலும் கூட ஞானபூமி, ராமகிருஷ்ண விஜயம் முதலான ஆன்மிகப் பத்திரிகைகளில் மட்டுமே வெளியாகி, அந்த வார்த்தையே ஒரு மென்தியானத்தில்தான் இருந்துவந்தது. சூப்பர் ஸ்டார் ரிஷிகேஷுக்குப் போகும்பொதெல்லாம் கூட இமயமலைதான் பிரதான தலைப்புச் செய்தியாக இருக்குமே ஒழிய, அவர் தியானித்தாரா இல்லையா என்பதெல்லாம் பேசுபொருளாக ஆகவில்லை. எல்லாம் தீர்க்கதரிசியான கமல் பாபநாசம் திரைப்படம் வழியாகத் தந்த கண்திறப்புதான்.
அத்திரைப்படம் வந்த அடுத்த இரண்டாவது வருடத்திலேயே அப்போதைய முதலமைச்சர், பழைய ஆஸ்தான உடன்பிறவா சகோதரியும், புதிய சின்னம்மாவுமான ஆளுமையால் ஆள் வைத்து அடிக்கப்பட்ட நாளில், தனது பழைய முதலாளியும், புதிய அமரருமான அம்மாவின் சமாதி முன்னால் கண்மூடி அமர்ந்தபோது சுயம்புலிங்கம் அறிமுகப்படுத்திய தியானம் என்ற வார்த்தையின் வலு தமிழ் கூறும் நல்லுலக மீடியாவிற்கு உடனே நினைவுக்கு வந்தது. அந்த வார்த்தைக்கு, மெரீனாக் கடற்கரையின் பறக்கும் குதிரையின் இறக்கைகள் கொண்ட சமாதி மண்டபத்தில் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. முதல்வர் தியானம் என்ற சொற்றொடர் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்ததில் நியூஸ் சானல்களின் டி.ஆர்.பி. எகிறியது.
Add Comment