இலங்கையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வருமா, அல்லது பாராளுமன்றத் தேர்தல் வருமா என்ற பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கும் போது, எதிலும் சுவாரசியமில்லாத ஒரு கூட்டம் ‘சரி தேர்தல் வருமா?’ என்று கேட்டுக் கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேர்தல் வருமா என்று கேட்பவர்கள் இரண்டு தரப்பினர்.
‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே பிரதமராய் இருந்த 2015 – 2019 காலத்தில் இப்படித்தான் மாகாண சபைத் தேர்தல்களுக்கு ஆப்பு சொருகினார். மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகுதான் 2018-ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலைக்கூட நடத்த முடிந்தது. நாட்டின் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி 2023-ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல் பின்கதவு வழியாக ஒளிந்து கொண்டார். எதிர்காலத்தில் நடைபெற இருப்பது ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் இருபெரும் தேர்தல்கள். இதில் ரணிலால் எந்தளவுக்குத் தனது குப்பாடித்தனத்தைச் செய்ய முடியும் என்று தெரியவில்லை. தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் ஏதாவது செய்யக் கூடும்’ என்கிறார்கள் ரணிலினதும் அவரது கட்சியினதும் சரித்திரம் தெரிந்தவர்கள்.
ஆனால் ரணிலின் குருட்டு பக்தர் தரப்போ, ‘ரணில் என்பவர் பழுத்த அரசியல்வாதி, தென்னாசியாவின் அரசியல் நரி, படு தந்திரசாலி. அவர் இங்கே செஸ் ஆட்டம் ஒன்று ஆடிக் கொண்டிருக்கிறார். எந்த வழியிலேனும் சரி… அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்தான் ஜனாதிபதி. 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை ரணில்தான் இந்தளவுக்காவது சரி செய்தார். அத்தியாவசியங்களுக்கு வரிசையில் நின்று செத்துப் போகும் தலைமுறை ஒன்று உருவாகப் பார்த்தது. அந்த அபத்தத்தை ரணில்தான் தன் மதியூக நுட்பத்தால் தீர்த்தார். ஆகவே அவர் அடுத்த சில தசாப்தங்களுக்கு இத்தேசத்தை ஆண்டு மகிழ வேண்டும். 2048 வரை ரணில் ஆட்சி தொடர்ந்தால் நம் கதையே வேறு. நாம் அமெரிக்காவுக்கு நிகரான ராஜ்ஜியமாய்ச் சகல வளங்களும் பெற்று மிளிர்வோம்.’ என்கிறார்கள்.
ரணிலை நரியுடன் ஒப்பிடுவது நரிக்கு தெரியுமான்னு தெரியவில்லை.இலங்கை நிலவரத்தை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.