கறை நல்லது என்கிறது கறை நீக்கும் திரவத்தை உருவாக்கிய நிறுவனம். போர் நல்லது. எதிரியை நீக்கிப் பாதுகாப்பாக வாழப் போர் ஒன்றுதான் வழி என்கிறது, போர் செய்யும் அரசாங்கம். இவற்றில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை அல்லவா?
இதைப்போன்ற முரண்பட்ட விஷயங்களை நம்பவைத்து, முடிவில் தற்சார்பற்ற உண்மையை மறக்க வைப்பதுதான் இரட்டைச் சிந்தனை என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். ரஷ்யாவின் இவாநோவா நகரிலிருந்து இதைச் சொல்லவும் தைரியம் வேண்டுமல்லவா? அதனால்தான் அங்கிருக்கும் நூலகத்தின் போஸ்டரில் மட்டும் சிரித்துக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் நடக்கும் கதையாக எழுதப்பட்ட, அரசியல் நையாண்டி நாவல் 1984. ஆர்வெல் அன்று கணித்தது இன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனம்கூட நிறைவேறாமல் போகலாம். ஆனால் ஜார்ஜ் ஆர்வெலின் நாவலில் வரும் உலகம், இன்றையச் சூழலைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக ரஷ்யா, சீனா போன்ற சர்வாதிகார உலகத்தை. பிரசாரம், தேசியவாதம், சர்வாதிகாரம், தணிக்கை, கண்காணிப்பு, சமத்துவமின்மை என்று வலதுசாரி, இடதுசாரிப் பாகுபாடின்றி எல்லாவற்றையும் கிழித்தெறியும் நாவல். மனிதர்களைக் கீழ்த்தரமாக நடத்தி, வாழ்நாள் முழுக்கப் பயத்தோடேயே வைத்திருக்கும் உலகத்தை பிரதிபலிப்பது. நாவல் வெளியானவுடன் மேற்குலகில் கொண்டாடப்பட்டு, ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது.
Fantastic Article