1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அது சட்டவிரோதமான கடத்தல் தங்கம் அல்ல. அதிகாரபூர்வமானதுதான். மத்திய ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது.
உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளும் தங்கம் இருப்பு வைத்திருக்கும். ஒரு நாட்டின் கரன்ஸியைப் போலத் தங்கமும் நிலையானது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலோ, டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு குறைந்தாலோ இருப்பில் வைத்திருக்கும் தங்கத்தைக் கொண்டு அந்நாடு மீண்டுவர முடியும். அதனாலேயே அனைத்து நாடுகளும் அவர்களுடைய பொருளாதார நிலைக்கேற்றவாறு ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருப்பில் வைத்திருக்கின்றன, துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாட்டினுடைய மொத்தத் தங்க இருப்பில் பதினேழு சதவிகிதம் அந்நாட்டின் மத்திய வங்கி வைத்திருக்கும். இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி இருப்பில் எண்ணுற்று இருபத்து இரண்டு டன் தங்கம் உள்ளது.
ஆனால் இவற்றில் சரிபாதிக்கும் மேற்பட்ட தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருப்பில் வைத்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள வங்கிகளிலும் ஸ்விசர்லாந்தில் உள்ள சர்வதேச குடியேற்றங்களின் (The Bank for International Settlements) வங்கிகளிலும் மத்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மத்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வெளிநாட்டில் இருப்பில் வைத்திருக்கிறது. 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது தன்னுடைய கையிருப்பில் இருந்த தங்கத்தில் ஒரு பகுதியை லண்டன் வங்கியில் அடகு வைத்தது.
Add Comment