அது பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதி. இந்தியா அப்போது வறுமை, நோய், அச்சம், பாதுகாப்பின்மை, கவலை, தன்னம்பிக்கையின்மை, பட்டினி ஆகிய கொடிய ஆற்றாமைகள் பலவற்றிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலம். உலகை அஞ்சி தன்னுள் சுருண்டு கொண்டிருந்த இந்த ஞானபூமிக்கு அந்த நாளில் விவேகம் கொண்டு எழுப்புதல் தியானத்தைச் செய்ய யாருமில்லாது இருந்த பருவம். அப்போதுதான் சுவாமி விவேகானந்தர் தனது பயணங்களை, உரைகளைத் தொடங்கியிருந்தார். துயிலிலும், மடமையிலும் துவண்டு போயிருந்த தேசத்தை, ‘எழுமின், விழுமின், குறிசாரும் வரை நில்லாது செல்மின்’ என்ற உபநிஷத் வாக்கியத்தை எளிமையாக, ஆனால் வலிமையாக இந்தியாவின் ஆப்தவாக்கியம் ஆக்கினார்.
செல்லுமிடமெல்லாம் உற்சாகத்தையும், ஆன்ம வலுவையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின அவரின் உரைகள். அவர் பேசியது ஹிந்து மதம் பற்றித்தான் ஆனால் அது மதமாற்றத்திற்காகவோ, மத வெறிக்காகவோ ஒருபோதும் செய்யப்பட்டதில்லை. அவர் இந்து மதப் பற்றாளர்தான். ஆனால் மதச் சீர்திருத்தவாதி என்றே தன்னை கூறிக் கொள்கிறார். அங்கேயே அவரது பணி நின்றிருந்தால் அன்றும், இன்றும் அவரைப் பற்றிப் பேச நம்மில் ஏதும் மீதமிருந்திருக்காது.
அவர் சமூகச் தீர்திருத்தவாதி, தத்துவவாதி, சிந்தனையாளர், ஞானி. அவரின் பேச்சால், முழக்கங்களால், துவண்டு போயிருந்த தேசத்திற்கு முதல் ஒளி கிடைத்தது. அந்த ஒளி பெருகிப் பெருகி இந்தியாவின் சுதந்திர ஜோதியாகச் சுடர்விடும் வரை, அவரின் அந்த மாபெரும் பணி அவரின் மறைவிற்குப் பின்னரும் இந்தத் தேசத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்படிப்பட்டவர் தன் தேடலின் ஒரு பகுதியாகக் குமரிமுனையாகிய கன்யாகுமரிக்கும் வந்திருக்கிறார். 1892 டிசம்பர் மாதம் 25, 26, 27 ஆகிய தேதிகளில், கடலின் நடுவில் இருந்த பாறைத்திட்டில் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார். இங்கிருந்துதான் தனது முழுமையான ஆன்மிகப் பயணம் தொடங்கியது என்று தனது புத்தகங்களில் விரிவாகப் பேசியிருக்கிறார்.
ஒரு கடினமான சூழ்நிலையில், தேசத்தை ஒரு பெரும் இக்கட்டில் இருந்து மீட்ட பெருமகனார்களில் விவேகானந்தரின் பெயரும் முதல் வரிசையில் இருக்கும். அப்பேர்ப்பட்ட ஞானியின் நூற்றாண்டு விழா வந்தபோது அவருக்கு அந்தப் பாறையிலேயே ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
Add Comment