“க்ளவுட்” என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சில முக்கியமான ஃபைல்களை மட்டும் க்ளவ்டில் ஏற்றி வந்தோம். க்ளவுட்காரர்கள் கொடுத்த சொற்ப ‘ஜி.பி.’களே போதுமானதாக இருந்தது. ஆனால் இந்தச் சொகுசுக்குப் பழகிப்போன நாம், ‘எதுக்கும் இருக்கட்டுமே…’ என்று எல்லாவற்றையுமே க்ளவ்டில் போடத் தொடங்கினோம். இன்று நாம் பார்க்கும் யூ-ட்யூப் வீடியோக்கள் முதல் கூகுள் சர்ச் வரை அனைத்துமே க்ளவுட் தான்.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ‘ப்ரைவேட் க்ளவுட் கம்ப்யூட்’ (Private Cloud Compute) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. என்ன அது?
‘ஆப்பிள் இண்டெலிஜென்ஸ்’ என்று ஒன்று வந்துள்ளது. ஆப்பிள் தனது ஒட்டுமொத்த ஈக்கோ சிஸ்டத்தையும், ‘எங்கும் ஏ.ஐ. மயம்’ என்று மாற்றுகிறது. இவ்வாறு மாற்றும் போது ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் கம்ப்யூட்டிங் பவர். ஆப்பிள் கருவிகள் சக்தி வாய்ந்தவைதான். ஆனாலும் சில ஏ.ஐ செயல்பாடுகளுக்கு இவை போதாது.
எவ்வாறு சமாளிப்பது என்று யோசித்த ஆப்பிளுக்குத் தோன்றிய விடைதான் ப்ரைவேட் க்ளவுட் கம்ப்யூட். உங்கள் கருவிகளில் செய்ய முடியாவிட்டால் என்ன… எங்கள் க்ளவ்டில் நாங்கள் செய்து தருகிறோம். இது தான் ப்ரைவேட் க்ளவுட் கம்ப்யூட்டின் அடிநாதம்.
பார்ப்பதற்கு மிக எளிதானதாக, “பாஸ்.. இதெல்லாம் ஒரு பிரச்னையா?” என்பது போலத் தோன்றும். ஆனால் இதிலிருக்கும் பெருஞ்சிக்கல் ப்ரைவசி. நமது கருவிகளிலேயே வேலையை முடித்துக்கொள்வது என்பதுதான் எப்போதும் ஆப்பிளின் ஸ்டைல். அவ்வாறு செய்வது தான் பாதுகாப்பானது என்று கூறிவந்தார்கள்.
“இல்லையே.. ஆப்பிள் ஐ-க்ளவுட் ரொம்ப வருஷமா இருக்கே… நானெல்லாம் யூஸ் பண்றேனே…” என்று உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம். ஐ-க்ளவுட் என்பது பைல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் ஒரு வசதி. அதில் நாம் ப்ராஸசிங் எதுவும் செய்வதில்லை. ஆனால் இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது, நமக்குத் தேவையான செயல்களை க்ளவ்டிலேயே எக்ஸிக்யூட் செய்வது.
க்ளவுட் ஸ்டோரேஜ் என்றால் ‘எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்’ என்ற ஒன்றின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்யலாம். ஆனால் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இருந்தால் அந்த டேட்டாவை நாம் விரும்பும்படி ப்ராசஸ் செய்ய முடியாது. ஆனால் இப்போது நாம் அனுப்பும் டேட்டாவை ப்ராசஸ் செய்து அதற்கான விடையை ப்ரைவேட் க்ளவுட் கம்ப்யூட் தர வேண்டும்.
ஒரு சாம்பிள். உங்கள் ஐபோனில் ஒரு ஃபோட்டோ உள்ளது. அதை ஏ.ஐ. மூலம் மேம்படுத்த நினைக்கிறீர்கள். இதை உங்கள் கருவியில் உள்ள ஏ.ஐ.யே செய்து முடித்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால் “இது என்னால முடியாது சாமி…” என்று டிவைசில் உள்ள ஏ.ஐ. கைவிரித்து விட்டால், அடுத்த சரணாகதி க்ளவுட். இப்போது உங்கள் ஃபோன், இந்தப் ஃபோட்டோவை க்ளவுடுக்கு அனுப்பும். க்ளவுட் இதைப் ப்ராசஸ் செய்து, பளிச்சென்ற ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்பி வைக்கும். இவ்வாறு அனுப்பும் போது ப்ரைவேட் க்ளவுடில் உள்ள ப்ராசஸர்கள் இந்த ஃபோட்டோவை ஓப்பன் செய்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்யும். இங்கு தான் சிக்கல்.
Add Comment