நவீன பனிப்போர் எதை அடிப்படையாக வைத்து நடக்கிறது?
எந்த நாட்டிடம் அதிசிறந்த ஏ.ஐ. ட்ரோன் ஆயுதம் இருக்கிறது என்பதை வைத்துதான். தற்சமயம் கிட்டத்தட்ட பதினோரு நாடுகள் இந்த ட்ரோன்களை வைத்து உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சீனா இந்த இரு வாரங்களில் காட்டிய ட்ரோன் வித்தைகள் ஏராளம். தான் கெட்டது போதாதென்று மியன்மருக்கும் ட்ரோன்களை அள்ளி வழங்கிப் பரோபகாரியாக மாறியிருக்கிறது நவீன சீனா.
பழைய பனிப்போர் முடிவுக்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அணு ஆயுதமும், விண்வெளித் தொழில்நுட்பமும் இரட்டைக் குமரிகள் போலத் தளதளவென்று போட்டிக்கு வளர்ந்து வந்து கொண்டிருந்த போது, அனைத்தையும் கட்டுப்படுத்தும் விதமான சட்டவிதிகள் அமலுக்கு வந்தன. போரும் முடிந்தது. ஆனால் ஏ.ஐ. குழந்தை பிறந்து இப்போது இளைஞனாகும் தருவாயாகியும், அது தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்கள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அதனால் உலக நாடுகள், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், தாக்குதல்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கண்டபடி நடைபெற்று வருகிறது. பனிப்போரை விட மோசமான ஒரு ரகசியப் போர் இப்போது புகை விட்டுக் கொண்டிருக்கிறது. மியன்மர் அதன் ஒரு சிறு அத்தியாயமாகச் சேர்ந்திருக்கிறது.
பர்மா என்ற பழைய பெயர் கொண்ட மியன்மரில், ஆன் சாங் சுகியின் அரசை இராணுவ அதிகாரம் 2021-இல் தோற்கடித்து ஆட்சியமைத்தது. அந்த நாள் முதலே உள்நாட்டில் ஏராளமான கிளர்ச்சிக் குழுக்கள் புதிய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றன. கொரில்லாத் தாக்குதல் உட்பட உலகின் எத்தனையோ வகையான எதிர்ப்புப் போராட்ட முறைகளை அவை உபயோகித்தும் வருகின்றன.
Add Comment