1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1991-ஆம் ஆண்டு பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக டெல்லியில் வீட்டிலிருந்தே படிப்பைத் தொடரும் சூழல் உருவானது.
பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பௌத்தவியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். விபஸ்ஸனா என்னும் பௌத்த தியான முறைகளைப் பயிற்றுவிப்பதில் தேர்ந்தவரான எஸ்.என். கோயங்காவிடம் பயிற்சி பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே நண்பராக அறிமுகமாகியிருந்த ராபர்ட் வதேராவை 1997-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வமில்லாதவராகவே இருந்தார். மக்கள் தன்னை ஈர்த்தது போல அரசியல் ஈர்க்கவில்லை. தான் கற்றுத் தேர்ந்த விபஸ்ஸனா தியான முறைகளின் வழியாக இதை உணர்வதாகச் சொன்னார். மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளை அரசியலில் இல்லாமலும் தன்னால் செய்ய முடியும் எனத் தொடர்ந்து சொல்லி வந்தார்.
Add Comment