சிங்கப்பூர் உத்தமர்கள்
தமிழ் இணையம் 99 மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க டேப், டேம் எழுத்துருக் குறியாக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. யூனிகோடு வந்த பிறகும்கூட சில அரசு அலுவலகங்களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது. மலேசியாவில் திஸ்கியே தொடர்ந்தது. விசைமுகத்தைப் பொறுத்தவரை எதைத் தேர்ந்தெடுத்து வேண்டுமானலும் தட்டச்சு செய்ய மென்பொருள்கள் உதவுகின்றன. அதில் எப்போதும் பெரிய சிக்கலில்லை.
ஏகப்பட்ட குறியாக்கங்கள் இருந்த நிலை மாறி திஸ்கி, டேம், டேப் என்று சுருங்கிவிட்டன. சிக்கல் தீர்ந்ததா என்றால் முற்றிலும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு சில அங்கீகரிக்கப்பட்ட குறியாக்கங்கள் மட்டுமே வழக்கத்தில் இருந்ததால் குழப்பம் குறைந்தது. அந்த வகையில் நல்ல முன்னேற்றம். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவற்கான செயலிகளைக் கணினி வல்லுநர்கள் உண்டாக்கினர். கணினியில் இதை நிறுவிக் கொண்டு டேப் குறியாக்கத்தில் இருந்து திஸ்கி குறியாக்கத்துக்கோ அல்லது திஸ்கியில் இருந்து டேபுக்கோ மாற்றிக் கொண்டு பயன்படுத்தினர். ஒன்றிரண்டு பிழைகள் வந்தாலும் இது எளிதாகவே இருந்தது.
தரப்படுத்தப்படாத குறியாக்கத்தில் தட்டச்சு செய்து டிஜிட்டலாக இருக்கும் கோப்புகளைத் தரப்படுத்தப்பட்ட குறியாக்கத்துக்கு மாற்றுவதற்கும் அவசியம் உண்டானது. என்ன குறியாக்கம் என்று தெரிந்தால் மாற்றிக் கொள்ளலாம். என்ன குறியாக்கம் என்றே தெரியவில்லை என்றாலும் அதை மாற்றித் தரும்படி தனது செயலியை உருவாக்கினார் முத்து. அவருடைய கன்வர்ட்டர் டிஜிட்டல் கோப்பில் உள்ள எழுத்தை உள்வாங்கிச் செயலியில் உள்ள மேட்ரிக்ஸில் பொருத்திக் கொள்ளும். எவ்வளவு பெரிய டிஜிட்டல் புத்தகமாக இருந்தாலும் அதில் உள்ள குறியாக்கத்தை அறிந்து அதைப் புரிந்துகொண்டு வேண்டும் குறியாக்கத்துக்கு மாற்றிக் கொடுத்துவிடும். விண்டோஸ் 2000 அறிமுகமானதும் யூனிகோடு குறியாக்கத்தையும் அதில் வேலை செய்யும்படிச் செய்தார். யூனிகோடு பற்றி அடுத்த நிலை விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.
Add Comment