கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாட்டையே அதிர வைத்திருக்கின்றன. விஷச்சாராயம் அருந்திய அறுபது பேர் மரணம். நூற்று தொண்ணூற்று எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட செய்தித் தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களில் முதன்மையானது விஷச்சாராய மரணம்.
இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. முதல்வர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசும் விஷச்சாராயத்தைத் தடுக்க தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் விஷச்சாராய விற்பனையும் மரணங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்களில் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்டதுதான் அதிகம் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தக் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பான நிகழ்வுகள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. கணவன், மனைவி இருவரும் விஷச்சாராயம் குடித்து இறந்திருக்கிறார்கள். விஷச்சாராயத்தைக் குடித்ததால் பாதிப்படைந்தது சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்து வீட்டில் மீதமிருந்த சாராயத்தை அருந்தி மரணமடைந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள விஷச்சாராயம் அருந்தியவர்கள் தீவிர பாதிப்பில் இருப்பது தெரிந்தும் பலர் காவல்துறையினர் கடையை மூடும்வரை அதே கடையில் சாராயத்தை வாங்கி அருந்தியிருக்கிறார்கள்.
Add Comment