புனிதக் காதல்
சுய மரியாதை முறுக்கேறப் பிரதமர் நேருவின் தீன்மூர்த்தி பவன் மாளிகையை விட்டு வெளியேறி, பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டெல்லியிலேயே தனக்கென ஓர் அரசு வீட்டைப் பெற்றுக் கொண்டு அங்கே இடம் பெயர்ந்த ஃபெரோஸ் காந்தி டெல்லியில் தனியாக ஒரு நட்பு வட்டம் கொண்டிருந்தார். அதில் அரசியல், சமூகம், பத்திரிகை உலகத்தினர் என்று பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள்.
மாமனார் நேருவைப் போலவே, மாப்பிள்ளை ஃபெரோசுக்கும் ரோஜா என்றால் ஒரு தனிப்பிரியம். தன் புதிய வீட்டில் ஏராளமான ரோஜாச் செடிகளை வளர்த்தார் ஃபெரோஸ். தனி வீட்டில் வசித்தாலும் தீன்மூர்த்தி பவனுக்குச் சென்று மதிய உணவு சாப்பிடுவது, தன் பிள்ளைகள் ராஜிவ், சஞ்சய் ஆகியோருடன் நேரம் செலவிடுவது என்று தொடர்ந்தார் ஃபெரோஸ்.
தீன்மூர்த்தி பவனின் தோட்டத்தில் ஒரு புலிக்குட்டி, கரடிக் குட்டி, முதலைக் குட்டி உட்பட ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தன. அவைகளோடு அவ்வப்போது குழந்தைகள் ராஜிவ், சஞ்சய் இருவரும் விளையாடுவார்கள். ஃபெரோஸ், தீன்மூர்த்தி பவனுக்கு வருவதைப் போலவே, குழந்தைகளும், அவ்வப்போது அப்பாவின் வீட்டுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.
சஞ்சய்க்கு மிகவும் பிடித்தது முதலைக் குட்டிதான். ஆனால், சில காலத்துக்குள்ளாகவே அந்த முதலையை ஒரு மிருகக் காட்சி சாலைக்கு அனுப்பும்படி ஆனது. காரணம், ஒருநாள் அது இந்திரா காந்தியின் விரலை கடித்துவிட்டது. தாத்தாவும், அம்மாவும் புத்தகங்கள் வாசிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருந்தபோதிலும், பிள்ளைகள் இருவருக்கும் வாசிப்புப் பழக்கம் வரவில்லை.
Add Comment