111 . பிறந்தது ஆந்திரம்
“வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது.
சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள சம்மதித்தால், இன்னும் சில கட்சிகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ராஜாஜியை அணுகியபோது, பிரச்னைக்கு அவர் சொன்ன தீர்வு, (எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால்) ஜனாதிபதி ஆட்சியும், பிரார்த்தனையும் தான்!
காமராஜும், சஞ்சீவ ரெட்டியும் நேருவை சந்தித்து, ராஜாஜியின் சம்மதத்தைப் பெறும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதைத் தெரிவித்தார்கள். சென்னை அரசியல் பரபரப்புக்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல், ராஜாஜி, ஓய்வுக்காக குற்றாலத்தில் தனது நண்பர் டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால், சென்னையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாஜி தங்களுக்குத் தலைமை தாங்கி வழிகாட்ட வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
Add Comment