திடீரென மின்சாரம் இல்லாமல் போகிறது. திட்டமிட்ட அல்லது திட்டமிடப்படாத மின்சாரத் துண்டிப்பு. கவலை வேண்டாம். சுவர் பேட்டரியை ஆன் பண்ணுங்க. உங்கள் வீட்டுக்கு மீண்டும் மின்சார விநியோகம் உங்கள் வீட்டுச் சுவரிலிருந்தே கிடைக்கிறது. இது அறிவியல் புனைவுக் கதையல்ல. நிஜத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கான தொழில்நுட்பம் ஆய்வுக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டு ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.
சூழலை மாசுபடுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்தல் தற்போதுள்ள அத்தியாவசியத் தேவையாகும். சூரிய ஒளி, அணைக் கட்டுகளில் தேக்கி வைக்கப்படும் ஆற்று நீர், வீசும் காற்று, கடலலையின் சக்தி என இயற்கையிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்படியான தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிக்கவும் வேண்டுமல்லவா.? உதாரணமாகச் சூரிய ஒளி ஒரு நாளில் குறிப்பிட்டளவு நேரம் மட்டுமே கிடைக்கும். அதனைச் சேமித்து வைத்தால்தானே இரவு நேரத்தில் எமக்குத் தேவையான ஒளியைத் தரும் மின் விளக்குகளுக்குப் பயன்படுத்த முடியும்? மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரிகளுக்கான தொழில்நுட்பங்கள் பலவும் பயன்பாட்டில் உள்ளன. ஆனாலும் புதிய, பொதுவாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக மின்சாரத்தைச் சேகரிக்கும் ஒரு புது வழியினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Add Comment