மழைப் பச்சை என்றொரு நிறம் உண்டு. என்று நனைந்தோம் என்று காய்ந்தோம் என்ற இடைவெளி தெரியாத இலைகளுக்கு மட்டும் சொந்தமான நிறம் இது. இப்படியான மழைக்காட்டில் மட்டுமே வாழும் ஜீவன்களும் தனித்துவம் வாய்ந்தவை. கூரிய மூக்கும், எலி போன்ற உடலும், அணில் போன்ற வாலும் கொண்டு, மரங்களில் வாழும் ட்ரீ ஷ்ரூவ்கள்; கோழியின் உருவத்தோடு, பெரிய பாதங்களைக் கொண்ட மெகாபோட்கள்; உப்புநீர் முதலைகள்; நீளவால் சிறுகுரங்குகள் போன்றவைக் கூடிய சீக்கிரம் டைனோசருடன் பட்டியலில் இணையவுள்ள அழிந்துவரும் உயிரினங்கள்.
ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டவை கிரேட் நிக்கோபார் தீவின் மழைக்காடுகள். சூரியன் நுழைவதே கடினமான இந்தக் காடுகளில் நுழையப் போகிறது, இந்தியாவின் அடுத்த மெகா ப்ராஜெக்ட். எழுபத்து இரண்டாயிரம் கோடி செலவில் ஒரு நவீன நகரம் உருவாகப் போகிறது.
நீண்ட தூரம் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள், சரக்கை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாற ஒரு துறைமுகம். அங்கிருந்து அதே கப்பலிலோ, மற்ற போக்குவரத்து மூலமாகவோ சரக்குகள் இலக்கை சென்றடையும் வசதி. இந்தத் துறைமுகத்தை எளிதாக அடைய, ஒரு சர்வதேச விமான நிலையம். தேவைப்படும் நேரங்களில், இந்திய ராணுவமும் இதைப் பயன்படுத்திக் கொள்ளும். அந்தமான் தீவுகளோடு சுற்றுலாவை முடித்துக் கொள்பவர்கள், இனி நிக்கோபார் தீவுகளையும் அழுக்காக்க இது துணைபுரியும். சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானமும் உறுதி. ஆற்றல் வளங்களைக் கொண்ட தீவு என்பதால், அவற்றை அபகரிக்க எரிவாயு மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையமும் உருவாகப் போகிறது.
இப்போது நிதி ஆயோகின் இந்த மெகாத் திட்டத்திற்கு என்ன அவசரம்? காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, இந்தியாவின் செழிப்பான குடும்பங்கள் அனைத்தையும் வளைத்துப்போட வழிவகுத்தது போதாதா? தெற்கில் விரயமாகிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட வளம் நிறைந்த தீவுகளையாவது விட்டுவைக்கக் கூடாதா? காரணம் கேட்டால், அனைவரின் வாயையும் அடைக்கும் ஒரே பதில்தான். பாதுகாப்புக் காரணங்கள். இதைமீறிக் கேள்வி கேட்டுவிட முடியுமா? அப்படிப்பட்ட அக்கறையோடு தான் இது திட்டமிடப்படுகிறதா என்று பார்ப்போம்.
Add Comment