மே 19-ஆம் தேதி ஈரான் அதிபர் இப்ராஹீம் ரெய்ஸி எதிர்பாராதவிதமாய் விமான விபத்தில் கொல்லப்பட்ட போது அதுவரை அணிந்திருந்த மத்தியக் கிழக்கு தற்காலிக தாதா மாஸ்கை கழற்றி வைத்தது ஈரான். “சற்று நில்லுங்கள் தம்பிகளே! உள்ளூரில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று தன் ப்ரொக்ஸிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஏமனின் ஹுதிகளிடம் சொல்லி இருக்க வேண்டும். பிராந்தியத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டு உள்ளூர் கசமுசாவில் மூழ்கிப் போனது.
பலஸ்தீன் பிரச்னை உலகம் அழியும் வரை தொடரப் போவதால் அதைக் கிடப்பில் போட்டுவிட்டு அரசியல் சாசனப்படி ஐம்பது நாள்களில் தேர்தல் நடத்தும் பரபரப்பிலேயே ஈரானின் அரசியல் இயந்திரங்கள் அனைத்தும் சுழன்றன.
ஆறு அறிஞர்கள், ஆறு நீதிபதிகள் கொண்ட ஒரு கவுன்சில் நியமிக்கப்பட்டது. ’கார்டியன் கவுன்சில்’ என்று இதற்குப் பெயர். இந்தப் பன்னிரண்டு கோமான்களுக்கும் உச்சபட்சத் தலைவராக வழக்கம் போல சுப்ரீம் லீடர் என்றும் ஆன்மீகத் தலைவர் என்றும் கொண்டாடப்படும் ஆயத்துல்லாஹ் கொமேனி இருந்தார். அவர் அப்படித்தான். அவர் இல்லாத கமிட்டி கிடையாது. அவர் இல்லாத குழு கிடையாது. சமையலுக்குத் தேவையான உப்பு மாதிரி எல்லாவற்றிலும் உண்டு.
Add Comment