13. சந்தை
விளம்பர வாக்கியங்கள் (AdWords) அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கூகுள் வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்தது. இணையத்தின் மிக முக்கியக் கண்ணியாக அது வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வருமானம் நன்கு பெருகிக்கொண்டு வந்தது. சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றின் நான்காம் பக்கக் கிசுகிசுவில் கூகுள் ஒவ்வொரு காலாண்டிலும் பில்லியன் கணக்கில் லாபம் சம்பாதிப்பதாகவும், கணக்குக் காட்டப் பயந்துகொண்டு கூகுள் ப்ளெக்ஸ் அலுவலகத்தின் தரைத் தளத்தில் அதனைக் கட்டுக் கட்டாக ஒளித்து வைத்திருப்பதாகவும் செய்தி வந்தது. அதைப் பார்த்துச் சிரித்தாலும், இனிமேலும் அதை அப்படியே கடந்துவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்தது நிர்வாகக் குழு.
பொதுவாகவே ஒரு நிறுவனம் தன்னைப் பொது நிறுவனமாக முன்னிறுத்தி மக்களிடம் முதலீட்டை வரவேற்றுப் பங்குகளை வெளியிட்டால் பெரும்பாலும் அது பணத் தேவைக்காகத்தான் இருக்கும். இப்படி உள்ளே வருகிற பணத்தைக் கொண்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்குத் தேவையானவற்றைச் செய்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அதை நகர்த்துவதற்கு அந்த முதலீடு உதவி செய்யும் என்பதுதான் பொதுவான வரலாறு.
ஆனால் கூகுளின் கதையே வேறு. ஆரம்ப நாள்களிலிருந்தே சிக்கனவாதிகளாக இருந்த அவர்களுக்குப் பொருளாதாரத் தேவைகள் என்பதெல்லாம் இல்லவே இல்லை. உள்ளதைக் கொண்டுதான் அத்தனை நல்லதுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் மேற்கண்ட வதந்திக்காக மட்டுமல்லாமலும், பொதுத்துறை நிறுவனமாக மாறுவதற்கு வேறுசில காரணங்களும் இருந்தன.
கூகுளின் இத்தனை பெரிய வளர்ச்சியை மனதில் கொண்டே அதன் ஆரம்ப நாள்களில் முதலீடு செய்யத் தொடங்கியவர்களுக்கு நல்ல பெரிய லாபம் ஒன்றைச் செய்துகொடுப்பது நியாயம் என்று நினைத்தனர். போலவே கூகுளின் மிகத் திறமையான ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் பங்குகளையும் இணைத்து வழங்கிக் கொண்டிருந்தனர். பொதுத் துறைக்குப் போனால் அவர்களுக்கும் லாபம் கிடைக்கும். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களிலிருந்தெல்லாம் கூகுளைத் தேடி வந்திருக்கும் உலகின் மிகச் சிறந்த மூளைகளுக்கெல்லாம் உரிய நியாயம் செய்யவேண்டும்.
Add Comment