புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் அவருடைய பதினைந்து வயது மகளுக்கும் அண்மையில் ஜிகா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனே, கோலாப்பூர், சங்கம்னர் பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. பருவ ல மாற்றங்களின் போது ஏற்படும் நோய்த் தொற்றுகள் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டவை.
ஏடிஸ் வகைக் கொசுக்களால் பரவும் இந்த ஜிகா வைரஸ், டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றை ஒத்ததாகும். பாதிப்பு ஏற்பட்டு ஒருவார காலத்திற்குள் காய்ச்சல், உடலில் தடிப்புகள், மூட்டு வலி, கண் சிவந்திருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய தொற்றுத்தான் ஜிகா. பொதுவில் இது உயிர்க் கொல்லி நோய் இல்லையென்றாலும், கர்ப்பிணிப் பெண்களை இது தாக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவிற்குக் குறுந்தலை எனப்படும் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். குறுந்தலை எனப்படுவது சரியான மூளை வளர்ச்சி இல்லாததனால் ஏற்படும் குறைபாடு. தலையின் அளவு இயல்பைவிடச் சிறியதாகக் காணப்படும். இது அந்தக் குழந்தைக்கு நீண்டகாலப் புத்தி மற்றும் உடல் குறைபாடுகளை ஏற்படுத்தலாம், அதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் கவனமாக இருப்பது மிக முக்கியம் எனவும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தெரிந்தால், பெண்கள் கட்டாயம் மருத்துவமனைக்கு வந்து தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Add Comment