“உக்ரைனியர்கள் தங்களை இன்னும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க உதவிக்காகக் காத்திருப்பது எதிர்காலத்தில் உதவாது. அதனால் ரைன்மெட்டல் குழுமம் அவர்களுக்கென ஒரு ஆயுதத் தொழிற்சாலையைத் தொடங்கவுள்ளது” என்று சென்ற வருடம் ஒரு பேட்டி அளித்திருந்தார் ஆமின் பாப்பெர்ஜெர், ஜெர்மனியின் ரைன்மெட்டல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், ரஷ்யாவின் பாதுகாப்புத் துணைத் தலைவர் மெத்வதேவ் சொன்னது ஒரே வார்த்தைதான், “இந்த முடிவை நாங்கள் வாணவேடிக்கைகள் வெடித்து வரவேற்போம். அவற்றை அந்தத் தொழிற்சாலைக்கு உள்ளேயே வெடித்து வரவேற்போம்.” என்றார். அமெரிக்க, ஜெர்மனி பீரங்கிகள் உக்ரைனுக்குக் கொடுக்கப்பட்ட போதும் இதேபோலத் தான் மிரட்டியது ரஷ்யா. ஆனால் பின்னர் செய்தும் காட்டியது. சரி, வெறும் மிரட்டல்தானே என்று நினைத்ததுதான் தவறு.
அதிர்ஷ்டவசமாக பாப்பெர்ஜெர் இந்த வருடம் உயிருடன் தப்பித்திருக்கிறார். தொழிற்சாலையை அழித்தால், இன்னொன்று கூடக் கட்டுவார்கள். அதனால் அதன் முதலாளியை அழித்துவிடலாம் என்று முடிவெடுத்தது ரஷ்யா. இந்தப் படுகொலைத் திட்டத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க உளவுத்துறை, ஜெர்மனிக்குத் தகவல் தர, முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவர் மட்டுமல்ல…. இன்னும் பல ஐரோப்பிய ஆயுத வர்த்தகத்தின் பெரும்புள்ளிகள் பட்டியலில் உள்ளனர்.
Add Comment