தினமும் பயணம் போகும் ரயில் பழுதடைந்து, இன்று ஓடாது என்று அறிவித்து விட்டார்கள். இனி என்ன நடக்கும்? மொத்த நாளும் ஸ்தம்பித்துவிடும். அடுத்து என்ன செய்வதென்றே புரியாது. பிரச்சினை சரியாகும் வரை காத்திருப்பதா, செலவைப் பாராமல் வேறேதாவது வண்டி பிடித்துப் போய்ச் சேர்வதா என்று தீர்மானிப்பது கடும் கஷ்டமாகிவிடும். ஃபோனில் அழைப்புக்கு மேல் அழைப்பு வரும். மொத்த பூமியும் நமக்கெதிராகச் சுற்றுவது போலத் தோன்றும்! ரயிலுக்கே இந்த நிலைமை என்றால், ஆனானப்பட்ட விண்வெளி ஓடம் மக்கர் பண்ணினால் நிலைமை! பண்ணி விட்டதே. இதோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், தனது சகாவுடன் தற்போது விண்வெளியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
மொத்த ஊடகங்களும் அவர்களது தற்போதைய நிலவரத்தை உலகத்துக்குத் தெரிவிப்பதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. சுனிதாவின் கிட்னி முதல், என்பு வரை அனைத்துப் பாகங்கள் பற்றியும் விவரணப் படங்கள் வெளியாகி விட்டன. “உயிர் பிழைப்பாரா சுனிதா?”
“இந்தியப் பெண்ணைத் திரும்பி வர விடுவார்களா?” என்ற ரீதியிலும், இன்னும் வரக்கூடிய எதிர்காலப் பயங்கரங்கள் பற்றியும் ப்ரேகிங் நியூஸ்கள் அலறுகின்றன. இதையெல்லாம் பார்க்கையில் நமக்குக் கல்பனா சாவ்லாவும் மனதில் வந்து போகிறார்.
உண்மையிலேயே நடந்தது என்ன, சுனிதா இப்போது என்ன செய்கிறார் என்பவை குறித்துக் கொஞ்சம் அலசி விடுவோம்.
கடந்த ஜூன் ஐந்தாம் தேதி நாஸாவின், வியாபார நோக்கங்களுக்காக ராக்கட் தயாரிக்கும் கிளை நிறுவனமொன்றான போயிங் (Boeing), தனது புது விண்வெளி ஓடமான ‘ஸ்டார் லைனர்’ இனை லான்ச் செய்தது. புத்தம் புதிய வண்டி. டைட்டானிக் கப்பல் போனது போல, முதல் பயணம். இதற்கு முன்னர் முயன்ற சில பயணங்கள் தோல்வியில் வேறு முடிந்திருந்தன. எல்லாம் கருத்திற் கொண்டு, மிகவும் தேர்ந்த, பழுத்த அனுபவமுள்ள இரு விண்வெளி வீரர்களான, சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோரைத் தெரிவு செய்து ஏற்றி அனுப்பினார்கள்.
Add Comment