114 இந்தி-சீனி பாய்-பாய்
1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த முயன்றார்.
ஆனாலும், எப்போதுமே திபெத்தின் மீது சீனாவுக்கு ஒரு கண்தான். ஆனால், அதன் மீதான தங்கள் கட்டுப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தது சீனா. 1950-இல் தன் அதிகார பலத்தைக் கொண்டு, ஆயுத பலத்தால் அதனைச் செய்தபோது, பல ஆசிய நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. அந்த சமயத்தில், சீனாவுடன் நேரடியான மோதலைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேரு, “இந்தியாவுக்கு திபெத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஒருபோதும் இல்லை; அண்டை நாடான திபெத்துடன் சுமுக உறவைப் பேணவும், பாரம்பரியமான வியாபாரப் பரிமாற்றங்களைத் தொடரவும் இந்தியா விரும்புகிறது” என்று கூறினார்.
1954-இல் இந்தியாவும், சீனாவும் திபெத் தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலமாகத் திபெத்தை, சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா ஏற்றுக் கொண்டது. அது மட்டுமில்லாமல், 1954-இல் இந்தியாவின் அயலுறவுக்கொள்கை- குறிப்பாக சீனாவுடனான உறவு குறித்த கொள்கையாக நேரு பிரத்யேகமான ஓர் சாத்வீகக் கொள்கை அறிவிப்பினைச் செய்தார். அதற்கு ‘பஞ்சசீலக் கொள்கை’ என்று பெயர்.
Add Comment