முரசு சிஸ்டம்ஸ்
விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல் கண்டிருந்தது. முத்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது அவர் தம்பி இளவரசு முக்கியப் பொறுப்பேற்று வணிகத்தை நடத்திக்கொண்டிருந்தார்.
தொடக்கத்தில், அவருக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடைவெளி சற்று அதிகம்தான். முதன்முறையாக முரசு அஞ்சல் மேம்பட்ட பதிப்பொன்றினை மேடையில் விளக்கும் பொறுப்பை இளவரசு ஏற்றுக் கொண்டபோது பதற்றத்தில் அவருக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. மாத்திரை போட்டுக்கொண்டு சோர்வாகத்தான் மேடையேறினார். ஆனால் தன்னியல்பாக வேடிக்கையாகப் பேசக்கூடியவர். விளக்கக் காட்சியில் இளவரசு, “இப்போது திரையில் தெரியும்” என்று சொல்லும் போது முத்து கணினியில் தட்டச்சு செய்ய அது பெரிய திரையில் மேடையில் தெரிய வேண்டும். முத்துவுக்குக் கணினி நிரல் எழுதத் தெரியுமே ஒழிய அப்போதெல்லாம் தமிழில் வேகமாகத் தட்டச்சு செய்ய வராது. அவர் எழுத்தெழுத்தாகத் தேடித் தேடித் தட்டச்சு செய்வதைப் பார்த்துப் பொறுமையிழந்தார் இளவரசு. கடுப்பில், “முரசு அஞ்சலைக் கண்டுபிடித்தவர் தட்டச்சு செய்யும் வேகத்தைப் பாருங்கள்” என்று மனக்குரலை வெளியே சத்தமாகச் சொல்லிவிட்டார். கூட்டமோ கைகொட்டிச் சிரித்தது. தன்னியல்பில் இருப்பது மக்களுக்குப் பிடிக்கிறது என்று தெரிந்து அதன் பிறகு துணிச்சலுடன் மேடையேற ஆரம்பித்தார்.
Add Comment