‘மேக் இன் இந்தியா, ஃபார் தி வேர்ல்ட்’ திட்டத்தின் கீழ், மாதம் ஐம்பதாயிரம் வேஃபர்களைத் தயாரிக்கப் போகிறது இந்தியா. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் வேஃபர்கள் அல்ல. மெல்லிய சிலிக்கான் தகடுகள். இதன்மேல் டிரான்சிஸ்டர் உள்ளிட்ட மின்னணுக் கூறுகளை வைத்து சர்க்யூட்களைப் பொருத்திவிட்டால், சிப் (சில்லு) தயாராகிவிடும். இவற்றை இனி உங்கள் ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பில் தொடங்கி, செல்போன், கணினி, கார்கள் என செயற்கை நுண்ணறிவுச் சாதனங்கள் வரை அனைத்திலும் பொருத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தைவானின் பவர்சிப் செமிகண்டக்டர் குழுமமும் (PSMC), இந்தியாவின் டாடா குழுமமும் இணைந்து மெகா செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தை குஜராத்தில் தொடங்கவுள்ளது. தொண்ணூறாயிரம் கோடியில், இருபதாயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திட்டம். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெருமைமிக்க இத்தருணம், இந்த வருடத் தொடக்கத்தில் நிகழ்ந்தது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எந்திரமயமாகத் தயாராகிறது இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை. உலகின் வாகனம், தொலைத்தொடர்பு, செயற்கை நுண்ணறிவுத் துறைகளின் சிப் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது.
தங்கம், பெட்ரோல் ஆகியவற்றில் இயங்கிய உலக வர்த்தகம் இனி சிப் தொழில்நுட்பத்திற்கு மாறப் போகிறது. இதன் வளர்ச்சியோடேயே பயணிக்கும் நாடுகள் மட்டுமே, நூற்றாண்டின் அடுத்த பாதியின் வல்லரசுப் பட்டியலில் இடம்பிடிக்க முடியும். இப்போதைக்கு இதில் கோலோச்சும் நாடுகள் ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா. இவை உருவாக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோரை, அதிகளவில் கொண்ட நாடுகள், சீனாவும், இந்தியாவும். மக்கள் தொகையில் மட்டுமல்லாமல் இவையிரண்டும், ராணுவம், பாதுகாப்புத்துறை, தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெற்று சற்றே முன்னிலையில் இருக்கிறது இந்தியா.
Add Comment