16. நிகழ மறுத்த அற்புதங்கள்
கூகுள் இன்று உலகின் உச்ச இணைய, நுட்ப நிறுவனம். சந்தேகமேயில்லை. அதன் வெற்றிகரமான முடிவுகள், உலகை ஆளும் செயலிகள் என அதன் உயரம் மிகப் பெரியது. ஆனால் அதுவும் பல நேரங்களில் தவறான முடிவுகள் எடுத்திருக்கிறது. பல சேவைகளைத் தொடங்கித் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் அதில் மனம் தளராது அதன் அடுத்த வேலையை நோக்கிச் சென்றிருக்கிறது.
தோல்விகளை ஒப்புக்கொண்டு தேவையில்லாத செயலிகளை நிறுத்தியிருக்கிறது. அதே சேவைக்கு மேலாக மேம்படுத்தப்பட்ட புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏன் தோற்றது என்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து நிகழ்த்தியிருக்கிறது. அப்படித் தோற்றுப்போன, பாதியிலேயே நிறுத்தப்பட்ட, தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகிற சேவைகளின் வரிசையும் சற்று பெரியதுதான்.
ஆர்குட் (Orkut)
இன்று பல்கிப் பெருகிவிட்ட சமூக ஊடகங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஆர்குட் தளம்தான். கூகுளில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆர்க்குட் புயுக்கோக்டன் (Orkut Büyükkökten) என்பவரால், ஒரு தனிப்பட்ட சோதனைத் திட்டமாக 2004ல் அறிமுகமாகியது. பின்னர் கூகுளால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் சோதனை முயற்சியாக பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கு பல்கிப் பெருகிய ஆதரவினால் உலகெங்கும் அறிமுகமாகி, பிரபலமாகியது.
அதுவரை முகமறியாத நட்புகளை இணைத்து வந்த பேனா நட்பு என்கிற சங்கதி முற்றிலும் டிஜிடலானது. இணையத்திற்கு உலாவ வரும் அந்தத் தலைமுறையினர் எல்லோரும் ஆர்க்குட்டில் இணைந்து உலகளாவிய நட்புகளை உருவாக்கி வளர்த்துக்கொண்டிருந்தனர்.
2004லிருந்து 2008 வரையிலும் தன்நேரில்லாத சமூகவலைத்தளமாகக் கோலோச்சிக்கொண்டிருந்த ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் வரவிற்குப் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதன் புகழை இழக்கத் தொடங்கியது. புதிய தலைமுறைப் பயனர்களுக்கு ஃபேஸ்புக் கொடுக்கத் தொடங்கியிருந்த எளிமையும், நுண்மையும் ஆர்குட்டால் வழங்கமுடியாமல் தள்ளாடியது. 2014 செப்டம்பர் மாதம் முற்றிலுமாக மூடுவிழா கண்டது.
Add Comment