இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலானது நடக்க இருக்கிறது. வழக்கம் போன்ற ஓர் ஆட்சிமாற்றத் தேர்தலாய் இருந்தால் ஜனாதிபதி ரணிலும் அவரது உயர் குலாமும் இத்தனை இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கமாட்டார்கள். சுதந்திரத்திற்குப் பின்னரான எழுபத்தாறு வருட சிஸ்டத்தின் ஆணிவேர்கள் பெயர்த்து எடுக்கப்படப் போகும் தேர்தலாய் இருப்பதனால்தான் இவ்வளவு துன்பத் துயரங்கள், தேர்தல் நடக்குமா நடக்காதா எனச் சந்தேகங்கள் என்று ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்தின் போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் வகிபாகத்தை விடுவோம். புத்தி சுவாதீனமுள்ள யாருக்குமே தெரியும் ரணிலை இத்தேர்தலுக்கு இழுத்துக் கொண்டு இதுவரை வந்ததே நாயைக் குளிப்பாட்ட அழைத்துச் செல்வது போலக் கஷ்டமான ஒன்று என்று.
செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னமும் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் தீரவில்லை. தினம் ஒவ்வொரு கதை சலங்கை கட்டி அலையவிடப்படுகிறது. தேர்தலுக்கு முன்னைய இரவு பாராளுமன்றத்தை ஜனாதிபதி ரணில் கலைக்கப் போவதாகவும், இதனால் புதிதாய் பதவியேற்கப் போகும் ஜனாதிபதிக்கு அமைச்சரவையை நியமிக்க முடியாமல் போகும் என்று ஒரு கதை. தேர்தல் திணைக்களம் தேர்தல் திகதியை அறிவித்த மறு நிமிசமே ரணில் டிப்போசிட் கட்டியது எல்லாம் ஒரு பூச்சுற்றல், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, வேட்புமனுத் தாக்கல் செய்யமாட்டார் என்று மற்றொரு கதை. இப்படி ஆயிரத்தில் ஓர் இரவுகளையே மிஞ்சுமளவுக்குக் கதைகள். இந்தளவுக்கு ரணில் ஏன் தேர்தலுக்குப் பயப்படுகிறார். எத்தனையோ தேர்தல்களை நடத்தி இருக்கிறார். தோல்வி கண்டிருக்கிறார். அப்படி இருக்க இத்தேர்தலில் மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம். 1978ம் ஆண்டின் அரசியல் சாசனத்தின் படி இதுவரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இந்த எட்டிலும் இல்லாத நெகடிவ்களும், இழுபறிகளும் இந்தத் தேர்தலில் மட்டும் எப்படி வந்தது?
Add Comment