111 தத்து
என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில் படும் டிவி கடைகளின் முன்னால் எல்லாம் அவனை நிற்கவைத்துக்கொண்டிருந்தது.
அதுவரை தன்னை ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே இருந்த வெறி காரணமாக, அறிவு வசதி படிப்பு அனுபவம் ஆங்கிலம் சினிமா இலக்கியம் என்று ஏதேனும் ஒரு விதத்திலாவது தன்னைவிடவும் மேலாக இருப்பவர்களுடன் மட்டுமே நெருக்கம் ஏற்படுத்திக் கொள்கிறவனாக இருந்த அவனுக்குத் தெரிந்தவர்கள் எனச் சொல்லிக்கொள்ளக்கூடிய அத்தனை பேர் வீடுகளிலும் டிவி இருக்க, தன்னிடம் மட்டும் இல்லாதிருப்பது உறுத்திக்கொண்டே இருந்தது. தவறாமல் தினமும் டிரைவ் இன் மூடியபின் செகண்ட் ஷோ போய்விட்டு தெருக்கடையில் தின்றுவிட்டு ஒரு மணிக்குக் குறையாமல் வீட்டுக்கு வந்து படுக்கிறவனுக்கு எதற்கு டிவி என்கிற கேள்வியே அவனுக்குள் எழவில்லை.
வேண்டும் என்று தோன்றிவிட்டால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டவே வேண்டாம் என்கிற வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்று இருக்கிற மூர்க்கன் என்பதால் அப்போதைக்கு டிவி பின்னால் அலையத் தொடங்கியிருந்தான். கலை இலக்கிய ரசனைமட்டுமின்றி தன்னுடையது என்று சொல்லிக்கொள்ளக்கூடிய எல்லாமே உயர்வாக இருக்கவேண்டும் என்பது அவனுக்குள் இருந்த வைராக்கியம். துரதிருஷ்டவசமாக இலக்கியத்தை விட்டால் உயர்வான எதுவும் மலிவாகக் கிடைப்பதில்லை டிவி உட்பட.
Add Comment