“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…”
ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன.
புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல ஈரான் வந்திருந்தார் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மயில் ஹனியா. நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரான் அதிபர் மசூத் உடன் சந்திப்பு இருந்தது. நாள் முழுக்கச் சில சந்திப்புகள் நடந்தன. அன்றைய இரவு, நேரங்கழித்தே தன்னுடைய அறைக்குத் திரும்பினார். எப்போது டெஹ்ரான் வந்தாலும், வழக்கமாகத் தங்கும் விருந்தினர் இல்லம். நகரின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது. இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையான ஐஆர்ஜிசிக்குச் சொந்தமான இடம் அது. எப்போதும் பாதுகாப்பு பலமாக இருக்கும். பக்கத்து அறையில் பாலஸ்தீன் இஸ்லாமிய ஜிகாத் தலைவர் தங்கியிருந்தார். ஹனியாவைக் கொல்ல அவர் அறையில் வெடிகுண்டு காத்துக் கொண்டிருந்தது.
ஜூலை 31, அதிகாலை இரண்டு மணியளவில் ஹனியா, அறையில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு ரிமோட் மூலம் இயக்கி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இஸ்மாயில் தங்கியிருந்த அறை சிதைந்து விழுந்தது. சம்பவ இடத்திலேயே இஸ்மாயில் ஹனியா உயிரிழந்தார். அவர் பாதுகாவலரும் பிழைக்கவில்லை. கட்டடத்தின் மற்ற பாகங்களில் பெரிதாக எந்தச் சேதமும் உண்டாகவில்லை. இஸ்மாயிலைக் குறிவைத்துத் திட்டமிட்டு நிகழ்த்திய தாக்குதல். குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெடிகுண்டு அந்த அறையில் பதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
Add Comment