சந்தேகமோ ஆச்சர்யமோ எதுவுமில்லை. பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் ஆட்சி இப்படித்தான் முடிந்து போகும் என்று சர்வதேச அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் யாருக்குமே தெரிந்துதான் இருந்தது. அது என்றைக்கு என்று தான் கேள்வியாய் இருந்தது. போராட்டக்கார மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று பொருள்படும் ‘ரசாகர்கள்’ என்று ஹசீனா திட்டவே, அவரது பதவி கவிழ்ப்பு செயல்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுத் தப்பியோடும் வீஸாவும் உடனடியாக வந்து சேர்ந்தது. முள்ளு இல்லாத நாக்கு, ஒரு ஆட்சியைக் கவிழ்க்கும் என்பதற்கு நவீன உதாரணமானார் ஹசீனா.
பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேய்க் முஜீபுர் ரஹ்மானின் மகளாய் அரசியலில் அரிச்சுவடி படித்துப் பிரம்மாண்டமாய் ஹசீனா வளர்ந்த கதையை ‘பங்களாதேஷ் – பெண்ணாதிக்கப் பிரச்னைகள்’ என்ற கட்டுரையிலும், நிகழ்கால மக்கள் புரட்சியை, ‘ அப்பன் வீட்டுச் சொத்து – பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி’ என்ற கட்டுரையிலும் விஸ்தாரமாய் வழங்கி இருந்தோம்.
அரச தொழில்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என்ற போர்வையில் கட்சிக்காரர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட முப்பது சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது. தொண்ணூற்று மூன்று சதவீதம் போட்டிப் பரீட்சை அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் மாணவர்கள் தெருவில் நின்றதற்கான காரணத்தை ஹசீனா தேடி இருக்கலாம். ஒரு ‘ஸாரி’ கேட்டு இருக்கலாம். கைது செய்யப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை விடுதலை செய்து இருக்கலாம். கொல்லப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதாய் அறிவித்து இருக்கலாம். கண்துடைப்புக்கேனும், பொலிஸ் மா அதிபரைப் பதவி நீக்கி இருக்கலாம். ஆனால் ஹசீனாவோ முழு மமதையில் இருந்தார். பதிலாகத் தோட்டாக்களை மேலும் ஏவிப் பலி எண்ணிக்கையை ஒரே நாளில் நூறாக்கினார்.
Add Comment