ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை மட்டுமே அந்தக் கூடாரங்களில் காண முடியும். வெயிலையோ, குளிரையோ தாங்க முடியாத கூடாரங்கள் இவை. முதலுதவியைத் தாண்டிய மருத்துவ வசதிகள் இல்லை. தொற்று நோய்களுக்குக் குறைவில்லை. இறந்துவிடாமல் தாக்குப் பிடிக்குமளவு உணவு வழங்கப்படுகிறது. மற்றபடி வெளியுலகைத் தொடர்பு கொள்ளும் அனைத்து வழிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக மோசமான முகாம்களுள் ஒன்றாக, ஐநாவின் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்ட வடகிழக்கு சிரியாவின் கைதிகள் முகாம் இது.
“என் குழந்தையை வளர்க்க ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். இப்படிப்பட்ட முகாமில் என் குழந்தை வளருவதை, என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அதனால் தான் நாடு திரும்ப, பிரிட்டன் அரசிடம் அனுமதி கேட்கிறேன்.” இந்த முகாமிலிருக்கும் இருபத்து நான்கு வயது ஷமீமா பேகத்தின் கோரிக்கை இது. தாய்நாடான பிரிட்டனுக்குத் திரும்ப அனுமதி கேட்டு வழக்கு தொடுத்தார். பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் இவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை என்று மறுத்துள்ளது. இவரை அனுமதிப்பது நாட்டிற்கே ஆபத்தானது என்று பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மறுத்துள்ளது. அவ்வளவு பயங்கரமானவரா ஷமீமா என்ற கேள்விக்கு இப்போதைக்கு விடை தெரியப் போவதில்லை.
பதினைந்து வயதில் (2015) லண்டனிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு விமானம் ஏறினார் ஷமீமா. கூடவே இரு தோழிகளும் இவருடன் சென்றனர். அங்கிருந்து கடத்தல்காரர்களின் உதவியுடன், துருக்கி வழியாக சிரியாவை அடைந்தார்கள். அதற்குப்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இந்த மூன்று தோழிகளே, வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து அதிகம் தொடர்பில் இருக்கவில்லை. ஆனால் நினைத்தபடி மூவருக்கும் வாழ்க்கை அமைந்தது. திருமணம், குழந்தைகள் என்று சிரியாவின் சராசரி குடும்பத் தலைவிகளானார்கள்.
Add Comment