திடீரெனப் பெரும் சலசலப்புடன் விதவிதமான புகைப்படங்கள் இண்டர்நெட் முழுக்கப் பரவத் தொடங்கின. அனைத்திலும் டிசைனர் ரக ஆடைகளுடன் ஜொலித்தார் நாமல் ராஜபக்ஷ என்கிற ராஜபக்ஷ புத்திரன். என்ன இருந்தாலும், தந்தையைப் போல, வெண்ணிற ஆடையுடன் சிவப்பு சால்வை போட்ட அவரின் ‘தேசிய’ படமளவு வேறெதுவும் எடுபடவில்லை. “நாமலுக்குத்தான் ஏற்கனவே திருமணமாகி, இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்களே. அம்பானி வீட்டுக் கல்யாணத்துக்கும் தம்பதி சமேதரகாப் போய் வந்து பல நாளாகிறது. பிறகேன் இந்த திடீர் ஃபோட்டோஷூட்” வேடிக்கையாக சில கணங்களுக்குப் பார்த்து விட்டு, தத்தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் இலங்கையர்கள்.
ஓரிரு நாள்களில் அவர்தான் மொட்டுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரென்று தெரிய வந்தது. ஊடகங்களை அழைத்து, உத்தியோகபூர்வமாக செய்தியை அறிவித்த பின், “புரட்சியாளர்களே, இதோ நீங்கள் கேட்டபடி, இளம் தலைவரொருவரை உங்களுக்காகத் தாரைவார்க்கிறோம்” என்பதாக நெகிழ்ந்து போனார் அவரது தந்தை, மகிந்த ராஜபக்ஷ!
மக்களுக்குத்தான் பெரும் புதிராகிவிட்டது. சுமார் இருவருடங்கள் முன்பு, மொட்டுக் கட்சியினர் தம் ஏகோபித்த முடிவால் தேர்ந்தெடுத்த தலைவர், ரணில் விக்ரமசிங்க அலேக்காக வேட்பாளர் சீட்டில் அமர்ந்திருக்கையில், தற்போதும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் அவரை ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கையில், ஏன் இன்னுமொருவர்? தான் தோற்கப் போவது குறித்து எவ்வித சந்தேகமுமின்றித் தெரிந்திருந்தும், களத்தில் இறங்கும் நாமலைப் பாராட்டுவதா, சிரிப்பதா என்று யாருக்கும் புரியவில்லை.
Add Comment