18. வலுவான முதல் தூண்
ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் அவ்வப்போது யாராவது ‘உங்களுடைய முதல் வேலை என்ன? அதற்கு வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?’ என்று பொதுவில் கேட்பார்கள். அதற்குப் பலரும் ‘பழைய நினைப்புடா, பேராண்டி, பழைய நினைப்புடா’ என்கிற தொனியில் பதில் எழுதுவார்கள். அந்தப் பதில்கள் அனைத்திலும் நூற்றைம்பது ரூபாய், ஐந்நூறு ரூபாய், இரண்டாயிரத்து முந்நூறு ரூபாய் என்பதுபோன்ற சிறு எண்கள் நிறைந்திருக்கும். ‘எனக்கெல்லாம் சம்பளமே கொடுக்கலை, சின்னப் பையன்னு ஒரு டீ, ரெண்டு வடைமட்டும் வாங்கிக் கொடுத்து ஏமாத்திட்டாங்க’ என்று உதட்டைப் பிதுக்குகிறவர்களும் உண்டு.
அநேகமாக எல்லாருடைய பணி வாழ்க்கையும் இப்படிச் சிறிய அளவில், சிறிய எண்ணிக்கையில்தான் தொடங்குகிறது. எடுத்த எடுப்பில் பெரிய நிறுவனம், லட்சக்கணக்கில் சம்பளம் என்று காதில் ஐபாட்ஸை மாட்டிக்கொண்டு சுற்றுகிறவர்கள் மிகக் குறைவு. மற்ற எல்லாரும் தட்டுத்தடுமாறிக் கிடைத்த வேலையில் தொற்றிக்கொண்டு, கிடைத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு மெல்ல மெல்லதான் முன்னேறத் தொடங்குகிறோம்.
ஏனெனில், தொடக்கத்தில் யாரிடமும் பெரிய திறமைகளோ அனுபவமோ இருக்காது, என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்று கற்றுக்கொள்கிற நேரத்தில் லட்சத்தைக் கொடு, கோடியைக் கொடு என்று பிடிவாதமா பிடிக்கமுடியும்? கிடைத்தது போதும் என்று ஏற்றுக்கொண்டு வேலை பழகவேண்டியதுதான்.
Add Comment