கொல்கத்தாவில் மருத்துவ மாணவர் வல்லுறவுக்குள்ளாகப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியர்களை மீண்டும் வீதிக்கு வந்து போராட வைத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வறிக்கையின் விவரங்கள் இதைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை எனச் சுட்டுகின்றன. சம்பவத்தின் கொடூரம் தரும் அச்சுறுத்தலை விட இவ்விவகாரத்தை அரசியல் செய்யும் வாய்ப்பாகப் பார்க்கும் அரசியல்வாதிகளின் இயல்பு கூடுதல் அச்சுறுத்தல்.
இரண்டு முக்கியமான கோணங்களை முன்வைத்துப் போராட்டங்கள் நடக்கின்றன. மருத்துவர்களின் பாதுகாப்பு. பெண்களின் பாதுகாப்பு. இரண்டையும் அலட்சியமாகக் கையாளுகின்றனர் இந்திய அரசியல்வாதிகள்.
பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரங்களும் அதற்கு மேலும் பணியில் இருக்கும் நடைமுறை இங்கே உள்ளது. போதிய ஓய்வும், கால இடைவெளியும் இன்றி மறுநாளே மீண்டும் இதே போல தொடர்ந்து பல மணி நேரங்கள் பணியில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பயிற்சிக் காலம் முடிந்த பிறகும் இது முற்றிலும் இல்லாமல் போவதில்லை. ஜூனியர் மருத்துவர்கள், பெண்கள், குரலெழுப்பத் தயங்குவோர், எளிய பின்னணியில் இருந்து வருவோர், நோயளிகளுக்காக பரிதாபப்படும் இயல்புடையோர் எல்லாம் இப்படியான அதீத பணிச்சுமையில் எப்போதுமே சிக்கியிருக்கிறார்கள்.
Add Comment