118. மீண்டும் ஹீரோ
1957ல் இந்தியா இரண்டாவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் உறுப்பினராக இந்திரா நியமிக்கப்பட்டார். கட்சியில், அவருக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
நேரு மறுபடியும் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபுல்பூர் தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்தார். தந்தைக்கு ஆதரவாக, தொகுதியில் பிரச்சாரம் செய்தார் இந்திரா.
இரண்டாவது பொதுத் தேர்தலின்போதும் சுகுமார் சென்தான் தேர்தல் கமிஷனர். முதல் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை பத்திரமாக வைத்திருந்து அவற்றையே இரண்டாவது பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தியது தேர்தல் கமிஷன்.
1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருந்தன. 1957 மே 13ஆம் தேதிக்குள்ளாக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்களை நடத்தி முடித்தாக வேண்டும். எனவே, பாராளுமன்ற, சட்ட மன்றங்களுக்கான தேர்தல்களை மார்ச் மாதத்தில் நடத்தி முடித்தால்தான், அடுத்து, அந்தத் தேர்தல்களை நடத்த முடியும் என்ற சூழ்நிலை.
Add Comment