119. நேரு மாமா
கடிதங்கள் எழுதுவது என்பது ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த விஷயம். அவர் எழுதின கடிதங்கள் ‘நான் இங்கு நலமே! நீ அங்கு நலமா?’ ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. சிறையிலிருந்து நேரு தன் மகள் இந்துவுக்கு எழுதிய கடிதங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, கடித இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.
அதே போல, தனக்கு வரும் கடிதங்கள் ஒவ்வொன்றையும் படித்து, உரிய பதில் எழுதுவதும் கூட நேருவுக்கு மிகவும் பிடிக்கும்.
1949ஆம் வருடம். அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி. நேரு தனக்கு வந்த கடிதங்கள் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அந்தக் கடிதம் ஜப்பானின் தலைநகரமான டொக்கியோவில் இருந்து வந்திருந்தது. அந்த நாட்டுப் பள்ளிக் குழந்தைகள் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள். அதில் அவரிடம் ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்திருந்தார்கள். அதைப் படித்ததும் அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.
ஆம்! ஜப்பானியக் குழந்தைகள் நேருவிடம் வைத்த கோரிக்கை, “எங்கள் நாட்டுக்கு ஓர் இந்திய யானையைப் பரிசாக அனுப்பி வையுங்கள்” என்பதுதான்!
உடனடியாக நேரு “ நீங்கள் விரும்பியபடி ஒரு யானையை அனுப்பி வைக்க என்னால் ஆன எல்லா முயற்சிகளும் செய்கிறேன்” என்று அந்தக் குழந்தைகளுக்குப் பதில் எழுதினார்.
Add Comment