வீதிகள் அகலமானதாக இருக்க வேண்டும். அதன் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டுவிடுங்கள். புல்வெளிகளும் தோட்டங்களும் விசாலமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். கால் பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு மைதானங்கள் இருப்பதும் அவசியம். கோயில், மசூதி, தேவாலயங்களுக்கு மறக்காமல் இடம் குறித்து வைக்கவேண்டும்.
இன்றைய ஜாம்ஷெட்பூர் அமைக்கப்படுவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடா, நகரம் எப்படி இருக்கவேண்டும் என்கிற வரைபடத் திட்டத்தை எழுதிவைத்திருந்தார். தனது தந்தையின் கனவுகளை வார்த்தை மாறாமல் செய்து முடித்தார், டொரபிஜி டாடா.
1880 களில் இருந்து 1904 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி இறப்பதற்கு முன்பு வரை, இந்தியாவின் எதிர்காலத்தை வளப்படுத்தும் மூன்று பெரும் பணிகளைச் செய்துமுடிப்பது மட்டுமே அவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது. முதலாவது இரும்பு மற்றும் எஃகு ஆலை. அடுத்தது நீர்மின் திட்டம். மூன்றாவது உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவுவது.
நியூயார்க் நகரத்தில் இருந்தது அந்த அலுவலகம். நெரிசலான அந்த இடத்தில் குறுகிய கதவுகளைக் கொண்ட ஓர் அறை. மேசை முழுவதும் புத்தகங்கள் பரப்பிக்கிடந்திருந்தது. அது சார்லஸ் பேஜின் அறை. ஆகச்சிறந்த புவியியல் மற்றும் உலோகவியலாளர். அதனாலேயே பல நாடுகளும் அவரைக் காணவும், அவரின் திறமைகளை உபயோகித்துக்கொள்ளவும் காத்துக்கிடந்தன.
Add Comment