தெருவில் போகும் யாரையாவது நிறுத்துங்கள். “இடஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டுப் பாருங்கள். பெரும்பான்மையினரின் பதில், “தவறு” என்பதாகத்தான் இருக்கும். “கார் வைத்திருக்கும் தலித் பயன்பெறுகிறார்” என்பார்கள். எத்தனை தலித் மக்கள் அரசாங்கப் பணி, கார், பங்களா வசதியுடன் இருக்கிறார்கள்? இது தெரிந்தால், சட்டப்படியே இடஒதுக்கீட்டை மாற்றியமைக்கலாம். நீக்குவது கூடச் சாத்தியம். முன்னேறிய வகுப்பினர்தாம் அதிகாரத்திலும் வசதியிலும் உயர்ந்துள்ளார்கள் என்பது இங்கு அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும். நம்முடைய வாய்ச்சொல் சரியா? மனக்குரல் சரியா? அதைத் தெரிந்து கொள்ளத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமாகிறது.
அலுவலகத்தில் குழுவாக இணைந்து டீம் லன்ச் போகிறீர்கள். எத்தனை பேர் எனத் தெரிந்தால்தான் எவ்வளவு செலவாகும் என்று மதிப்பிட முடியும். உணவு மேசையை முன்பதிவு செய்ய முடியும். நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இதை ஒப்பிடலாம். தலைக் கணக்கு தெரிந்தால்தான் நலத்திட்டப் பணிகளும் பட்ஜெட் போடுவதும் சாத்தியம். சரி. டீம் லன்ச்சுக்கு வருபவர்களில் எத்தனை பேர் சைவ உணவாளர்கள்? எத்தனை பேர் இறைச்சி உணவாளர்கள்? எத்தனை பேர் இரண்டுமே உண்பவர்கள்? இந்தக் கேள்விகளும் சேர்த்துத்தானே கேட்கிறோம்? சாதிவாரிக் கணக்கெடுப்பு அதைப்போன்றதே.
‘நான் வீர சைவமாக்கும்‘ பேஸ்புக்கில் பதிவிடுவோம். ‘இறைச்சி தான் எனக்குப் பிடித்த உணவு‘ என்று பாடி இன்ஸ்டா ரீல்ஸ் போடுவோம். ஆனால் டீம் லன்சுக்கு கணக்கெடுக்க இந்தத் தகவலைக் கேட்டால் ‘ஐயோ‘… உணவுப் பழக்கத்தை வைத்துப் பிரிவினை உண்டாக்குகிறார்கள்‘ என ஒப்பாரி வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஒரு பக்கம் ஜாதிப் பெருமை பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் கணக்கெடுத்தால் ஜாதிப் பிரிவினை வரும் என்கிறார்கள்.
Add Comment