ஆடல், பாடல், பலூன்கள், கொண்டாட்டம். அமெரிக்கக் கட்சி மாநாடுகள் களைகட்டும் மாதம் இது. அமெரிக்கத் தேர்தலில் பரப்புரைகள், விவாத மேடைகள் தவிர, கட்சி மாநாடு மிக முக்கியமானது. கட்சியின் முதன்மையான தலைவர்கள் நேரில் வந்து தங்களின் ஆதரவைத் தங்கள் கட்சி வேட்பாளருக்கு உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகே அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுகிறார். அப்படியே மீண்டும் ஒரு முறை கட்சிக் கொள்கைகள், நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுவார்கள்.
மாநிலக் கட்சி டெலிகேட்களும், முக்கிய பிரபலங்களும், தன்னார்வத் தொண்டர்களும் மட்டுமே இம்மாநாடுகளில் கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் கலந்து கொள்ள இயலாது. ஊடகங்களிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி.
குடியரசுக் கட்சியின் மாநாடு மில்வாக்கியில் நடந்தது. நிச்சயம் வெற்றி தனக்கே என்ற நம்பிக்கையில் 90 நிமிடப் பேச்சின் முடிவில் கட்சியின் வேட்பாளராகக் கிட்டத்தட்ட முடிசூட்டிக்கொண்டார் டிரம்ப். அப்படித்தான் ஊடகங்கள் இந்நிகழ்வைப் பற்றி எழுதின. கட்சி மாநாட்டில் பேசிய பலரும் அப்போதுதான் துப்பாக்கிச்சூடு தாக்குதலிலிருந்து மீண்டு வந்தவரைக் கடவுளாகக் கொண்டாடினர்.
சிறையிலிருந்து வந்த பீட்டர் நெவாரா, ஸ்டீவ் பேனன் போன்றோருக்கு, டிரம்ப்பின் புகழ்பாடவும் நீதித்துறையைத் தாழ்த்திப் பேசவுமே நேரம் போதவில்லை.
ஜனநாயகக் கட்சியின் நிலைமை வேறுபட்டிருந்தது. சிகாகோவில் நடந்த இவர்கள் கட்சி மாநாட்டில் புதிய அதிபர், துணை அதிபர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம்! ஆளும் அதிபருக்கும் முறையாக மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு.
Add Comment