“இந்த அரசு எந்த நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. திராவிட மாடல் அரசு என்றாலே மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கு நினைக்காத அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கும் அரசு என்று தான் பொருள். சக்தித் தலங்கள் தரிசனம், அறுபடை வீடுகள் தரிசனம், காசி யாத்திரையென அனைத்தையும் ஏற்பாடு செய்யும் அரசு இது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வசதியில்லாத பக்தர்கள் பயனடைந்துள்ளனர்” தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காகப் பேசியது இது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கடந்த சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். “இது பக்தர்கள் உள்பட அனைவரும் விரும்பும் ஆட்சி. பழநி, திருத்தணி, திருச்செந்தூர், குழந்தை வேலப்பர் கோயில், மருதமலை உள்படப் பல கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறநிலையத் துறையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் அதற்குச் சரியான ஆள் என்று அமைச்சர் சேகர் பாபுவிடம் அதை ஒப்படைத்தேன். ஆனால் கோவில்களிலேயே வசிக்கும் ஒரு அமைச்சர் பக்தர்களுக்குக் கிடைத்து விட்டார். முருகன் கோயில்களில் மட்டுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுபத்தி ஒன்பது முருகன் கோயில்களில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் பனகல் அரசரால் இந்து சமய அறநிலைய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கோயில் பாதுகாப்பு, முறையாகச் செயல்படுதல் உள்ளிட்ட பல சீரிய நோக்கங்களோடு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் எங்கள் அரசால் மிகச் செவ்வனே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் குறிபிட்டால் கடந்த மூன்று ஆண்டுகளில் 1355 கோயில்களில் கும்பாபிஷேகங்கள், மூன்றாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் செலவில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஒன்றரை லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள்மூலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்கள் அளவீட்டுப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Add Comment