சீக்கிரமே இந்த உலகை விட்டுச் சென்றிருந்த சிறுமலர்களுக்கு, அவர்களுக்கு பிடித்தமான பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்துகிறார். “அப்பாவி குழந்தைகள் தான் போரினால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள். மிகுந்த மன வேதனையைத் தரும் உண்மை இது. இனியும் நேரத்தை வீணடிக்காமல், இந்த நெருக்கடி நிலையிலிருந்து வெளிவரப் பேச்சு வார்த்தைகள் நடைபெற வேண்டும். இதற்கான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. ஒரு நண்பனாக இதை நான் உறுதியளிக்கிறேன்.” என்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
ஆறு வாரங்களுக்கு முன்னால் பிரதமர் மோடி மாஸ்கோவிற்குச் சென்றிருந்த போது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியான குழந்தைகள் இவர்கள். அன்றும் இதுகுறித்து வருந்தியவர், இன்று நேரில் ஆறுதல் சொல்ல உக்ரைனுக்குச் சென்றுள்ளார். நண்பரும் அதிபருமான புதினின் வசிப்பிடத்தில், தேநீர் உபசாரம், மின் வாகனச் சுற்றுப்பயணம் என்று தொடங்கி அரசாங்க ஒப்பந்தங்களில் முடிந்தது, மோடியின் இரண்டு நாள் மாஸ்கோ பயணம். தற்போதைய உக்ரைன் சந்திப்பு ஏழு மணிநேரம் மட்டுமே.
ஆனால் போகவர ரயில் பயணம் மட்டுமே இருபது மணிநேரம். ‘நடமாடும் கோட்டை’ என்று அழைக்கப்படும் உக்ரைனின் ரயில் ஃபோர்ஸ் ஒன் தான், மோடியை போலந்திலிருந்து உக்ரைனுக்குள் அழைத்துச் சென்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆனாலும், அவரும் உக்ரைனுக்குள் நுழைவதற்கான ஒரேவழி இதே ரயில்தான். குண்டு புகா ஜன்னல்கள், தனிப்பட்ட பாதுகாப்புப் படை, அதிநவீனத் தொலைத்தொடர்பு வசதி, மின்சாரத்தை எதிர்பாராமல் டீசலில் இயங்கும் என்ஜின் என்று போர்ச் சமயத்திலும் பாதுகாப்பானது இந்த ரயில். பயணத்தின் போது வேலை செய்யவும், ஓய்வெடுக்கவும் தேவையான வசதிகள் உண்டு. போர் பகுதிகளிலிருந்து நான்கு மில்லியன் அகதிகளையும், முந்நூறு ஆயிரம் மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களையும் கொண்டு சேர்த்த, உலகின் பன்னிரண்டாவது பெரிய உக்ரைனின் ரயில் நெட்வொர்க் இது.
Add Comment