அந்தச் செய்தி ஊடகங்களில் பரவத் தொடங்கிய போது இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் அலறிக் கொண்டு அறிக்கைவிட்டது. ‘இதோ பாருங்கள். ஜே.வி.பி கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் என்று எமது பெயரில் வெளியாகிக் கொண்டு இருக்கும் செய்தியில் யாதொரு உண்மையுமில்லை’ என்றது.
செய்தியின் ஆயுள், வெறும் ஒரு மணித்தியாலம் இருக்கும். ஆனால் தூதரகம் விழுந்தடித்துக் கொண்டு ‘நான் இல்லப்பா’ என்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட ஸ்டைல் அத்தனை நல்லதாய் இல்லை.
மறு நாள் இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை வந்தார். ஏதோ பாதுகாப்புத் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு ஒன்றுக்கே தோவல் இலங்கை வந்து இருக்கிறார் என்று கூறப்பட்டது. எனினும் ‘அப்படியா சரிங்க’ என்று நம்புவதற்கு யாரும் தயாராய் இல்லை.
தோவல் மாநாடு போனாரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வந்ததும் அப்படியே கோட் சூட்டைக் கூட மாற்றாமல் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். ஊடகங்களில் அபரிதமான கவனக் குவிப்பை இச்சந்திப்பு பெற்றது. மூடிய அறைக் கலந்துரையாடல் என்பதால் ‘என்ன பேசினார்கள்’ என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Add Comment