வட சென்னையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “திமுக உருவானதும் வட சென்னையில்தான்; முதல்வரான என்னை, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததும், இந்த வடசென்னை கொளத்தூர் தொகுதி மக்கள்தான்.” என்று நினைவுகூர்ந்துள்ளார். தி.மு.க. வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் தவிர்க்க முடியாத இடம் வடசென்னை. வரலாற்றில் இடம்பிடித்தாலும் வளர்ச்சியில் இடம் கிடையாது என்பதே உண்மை. அதை மாற்றத்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவானது.
ஆகஸ்ட் 26 அன்று, 6 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சில முடிவடைந்த திட்டங்களையும் திறந்து வைத்தார் ஸ்டாலின். வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தின் கீழ் கிட்டத்தட்ட 4 ஏக்கர் பரப்பளவில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைய உள்ளது. ஒன்றேகால் லட்சம் சதுர அடி அளவில் மீன் வளர்ச்சித் துறை சார்பில் கடைகளும், உணவகங்களும் அமைக்க இருக்கிறார்கள். மூலக்கொத்தளம் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் பெரியளவில் சமூகநலக்கூடம் உருவாகிறது. புரசைவாக்கத்தில் உருவாகும் பிரமாண்ட சலவைக்கூடத்தில் துவைக்கும் இயந்திரங்கள், உலர்த்த, துவைக்க, தேய்க்க அனைத்துக்கும் தனியிடம் என்று பல வசதிகள் செய்யப்பட உள்ளன. வாகனங்கள் நிறுத்தவும் தனி ஏற்பாடுகள் உண்டு. சுற்றுலா நோக்கில் புழல் ஏரியைச் சுற்றி நடைபாதை அமைத்து இயற்கையை ரசிக்கும் விதத்தில் சீரமைக்கிறார்கள். ரெட்டேரி, கொளத்தூர் ஏரிக்கரைகளும் இத்திட்டத்தில் இணைத்துள்ளனர்.
இதற்காக வெளியிடப்பட்ட 3டி வீடியோ மக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளது. எனினும் 4000 கோடி மதிப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த 6 திட்டங்கள். சுமார் 87 திட்டங்களுக்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 6 திட்டங்கள் தொடங்கி வைத்தபோது சுமார் ஐம்பது கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்திருந்த சில திட்டங்களையும் திறந்து வைத்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக நிதி ஒதுக்கி இன்னும் பலதைச் செய்ய உள்ளது அரசு.
Add Comment