120. உலகத் தலைவர்
காங்கிரஸ் கட்சியின் முகம், இந்தியாவின் மாபெரும் தலைவர் என்ற அடையாளங்கள் மட்டுமில்லாமல் ஜவஹர்லால் நேரு சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு தலைவராகவும் விளங்கினார்.
எகிப்து நாட்டின் ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியப் பிரதமர் நேருவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல விஷயங்களில் இருவரும் ஒத்த கருத்து கொண்டிருந்தனர். எகிப்துக்கு நேரு பலமுறை சென்றிருக்கிறார். 1955ல் எகிப்துடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தில் நேருவும், நாசரும் கையெழுத்திட்டார்கள்.
“நேரு, இந்திய மக்களின் ஆழ்ந்த மனங்களில் புதைந்து கிடக்கும் கனவுகளை செயல்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவர். இந்தியாவைப் போன்று அதே விதமான பிரச்னைகள் மற்றும் அனுபவங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்களின் மனசாட்சியாகவும் அவர் விளங்குகிறார்” என்று நாசர் நேருவைப் பற்றிக் கூறியுள்ளார்.
இந்தோனேசியா டச்சுக் காலனியாக விளங்கிய காலம் தொட்டே அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர் நேரு. இந்தோனேசியாவின் சுகர்னோவும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு நல்கி இருக்கிறார்.
Add Comment