கட்சி அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் வரிசையில் புல்டோசர் அரசியலும் இடம்பெற்றுவிட்ட ஜனநாயக தேசத்தில் நாம் வசித்து வருகிறோம். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசு இயந்திரம் விதிகளுக்குப் பதிலாக, புல்டோசர் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி சில ஆண்டுகள் கடந்து விட்டன.
யோகி ஆதித்யநாத் உ.பி.யின் முதல்வராகப் பதவியேற்று சில மாதங்கள் ஆகியிருந்தன. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். “குற்றவாளிகள் புல்டோசர் கொண்டு நசுக்கப்படுவார்கள்” என யோகி ஆதித்யநாத் சொன்னார். ‘இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம்’ எனச் சொல்லும் நம் அரசியல்வாதிகளின் வாக்கியம் தான் நினைவுக்கு வந்தது. ஆனால் பேச்சோடு நிறுத்தாமல் சொன்னதைச் செய்யவும் ஆரம்பித்துவிட்டார்.
யோகி பதவியேற்றதிலிருந்து சுமார் 67000 ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருப்பதாகச் சில செய்திகள் சொல்கின்றன. 2022ஆம் ஆண்டு, உ.பி. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் புல்டோசர் அரசியலை யோகி ஆதித்யநாத் அரசின் சாதனையாக முன்வைத்தனர். அந்தத் தேர்தலில் வென்றபிறகு புல்டோசர்களைக் கொண்டு வெற்றியைக் கொண்டாடினர். பாஜக கட்சிக்குத் தாமரை போல யோகி அரசுக்கு புல்டோசர் சின்னமாக மாறிவிட்டது. யோகி எடுக்கும் இந்த நடவடிக்கைகள் ‘சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறது’ எனச் சிலர் புல்லரித்துப் புகழ்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இலட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளை இடித்திருக்கிறார்கள். சுமார் 738000 பேர் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். யோகியின் இந்த அரசியல் சட்ட நியதிகளை எந்த விதத்திலும் பின்பற்றவில்லை என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
வாக்களிப்பீர் “புல்டோசர்”