கற்சிற்பங்களுக்குப் பெயர் போனது சென்னையின் மாமல்லபுரம். இந்தப் பிரம்மாண்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இந்தியக் கடற்சிப்பி அருங்காட்சியகம். இந்தியாவின் முதல் கடற்சிப்பி அருங்காட்சியகம். ஆசியாவிலேயே பெரியதும் கூட. சிப்பிக்குள் இருக்கும் முத்தை திறந்து பார்க்க நேரம் ஒதுக்கினால், புதுவிதமான அனுபவங்களும் ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன.
ராமேஸ்வரத்தில் பிறந்த ராஜா முகமதுவின் பொழுதுபோக்கு சிப்பி சேகரிப்பது. நாற்பது ஆண்டுகளாக இதைத் தொடர்ந்தவருக்கு, இதை அருங்காட்சியகமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. தனது சொந்த ஊர்க்காரரான அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஊக்கத்தோடு, 2013ஆம் ஆண்டு தனித்துவமான இந்தக் கலை அருங்காட்சியகத்தைத் தொடங்கியுள்ளார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் வருகை தரும் மாமல்லபுரத்தில் அமைந்திருப்பதால், இதன் புகழ் உலகெங்கும் சென்று சேர்ந்துள்ளது. தனது குடும்பச் சொத்துகளை விற்று, பல உலக நாடுகளைச் சுற்றிச் சேகரித்த அரிய சிப்பிகள் இவை. அவற்றைச் சுவாரசியத்தோடு நமக்குக் காட்சிப்படுத்தி, இத்துறையில் அவருக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அருங்காட்சியகத்தின் முதல் பகுதி மினி ஆசியா எனப்படுகிறது. ஆசியாவின் முக்கிய இடங்கள் அனைத்தையும் ஓரிடத்தில், அதன் சிறிய வடிவங்களாகக் காண முடியும். அனைத்தும் சிப்பிகளால் உருவாக்கப்பட்டவை. சிங்கத்தின் தலையும், மீனின் உடலும் கொண்ட, சிங்கப்பூரின் அடையாளமான மெர்லயன் சிலை தெரியுமல்லவா? அதை, இங்கு முழுக்க முழுக்க வெண் சிப்பிகளால் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்கவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
Add Comment