ஆற்றங்கரை ஓரம். அந்தப் பகுதியின் சந்தைக் கடைகளும் அருகிலேயே அமைந்திருக்கும் தோதான ஓர் இடம். என்னவெல்லாம் செய்யலாம்? வியாபாரம் தொடங்கலாம். கூட்டத்தை எளிதாகத் திரட்டலாம். பொது நிகழ்ச்சிகளை நடத்தலாம் .கொண்டாடலாம். மரண தண்டனை விதிக்கலாம். அதை மக்கள் சுற்றி நின்று காணச் செய்து அவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பலாம். இதில் வட கொரிய அரசின் விருப்பத்தேர்வு சந்தேகமேயில்லாமல் கொலையும், கொலை சார்ந்த நிகழ்வுகளும் தான்.
அவர்களின் நாட்டுக் கருட புராணத்தின் படி, மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்பவர்களுக்கு மரணத்தின் மூலம் விடுதலை வழங்கப்படும். அதை நடத்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் இடம் பார்த்து வைத்திருப்பார்கள் அரசு அதிகாரிகள். இவர்களைப் பொறுத்தவரை குற்றம் என்பது மக்கள் இணையச் சேவைகளைப் பயன்படுத்துவது, வெளிநாடுகளுக்குத் தொலைப்பேசி அழைப்புகளைச் செய்வது, நாட்டை விட்டு ஓட பார்ப்பது, திருட்டு, போதை வஸ்து பயன்பாடு என்கிற ரீதியில் தான் இருந்தது.
கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் கூடுதலாகச் சிலவற்றை சேர்த்திருக்கிறார்கள். தென் கொரியப் பாடல்கள், திரைப்படங்களை பார்ப்பது, அதில் வருவது போல மேற்கத்திய கலாசாரங்களைக் கடைப்பிடிப்பது, திருமணத்தின் போது வெள்ளை ஆடை அணிவது, போட்டோ ஷூட் செய்வது என அனைத்துமே கொடுங் குற்றங்கள் எனவும், அது வட கொரியாவைச் சீர்குலைக்கவல்லது என்பதும் அந்நாட்டின் ஆண்டவரான கிம் ஜொங் உன் இன் கருத்து.
Add Comment