22. செலவுகள் பலவிதம்
ஒரு திருமணத்துக்கு நூறு பேர் வருகிறார்கள் என்றால், அந்தத் திருமணத்தை நடத்துகிறவர்கள் அந்த நூறு பேரையும் ஒரே மாதிரியாகத்தான் கவனிப்பார்களா?
கண்டிப்பாக இல்லை. அவர்கள் சிலரை இயல்பாக வரவேற்பார்கள், சிலரை இன்னும் கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்வார்கள், வேறு சிலரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.
வந்திருக்கிற எல்லாரும் விருந்தினர்கள்தான் எனும்போது, அவர்களைக் கவனிப்பதில் இப்படி ஒரு வேறுபாடு ஏன்? விருந்தினர்களில் சிலருக்கு மட்டும் கூடுதல் கவனம் கிடைப்பது எதனால்?
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சிலர் முதன்மையான உறவினர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அந்தத் திருமணத்துக்குப் பெரிய அளவில் உதவியிருப்பார்கள். வேறு சிலர் முந்தைய குடும்ப விழாவில் ‘என்னை நீங்க சரியா மதிக்கவே இல்லை’ என்று முகம் சுருக்கியிருப்பார்கள்… இப்படி வெவ்வேறு காரணங்களால் அவர்களையெல்லாம் இன்னும் நன்றாகக் கவனிக்கவேண்டும், மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள் ஏதேனும் குறை சொல்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிடக்கூடாது என்று திருமண வீட்டார் நினைக்கக்கூடும்.
Add Comment