கடந்த முறை விவாதத்தில் டிரம்ப் பெற்ற வெற்றி அதிபர் வேட்பாளரையே மாற்றியது. தன்னை யாரும் வெல்ல முடியாது என்கிற நினைப்பில் இன்னொரு விவாதக் களத்துக்கு ஆர்வமாக ஒப்புக்கொண்டார் டிரம்ப். புதிய வேட்பாளர் கமலா ஹாரிஸ் வார்த்தைக்கு வார்த்தை கண்ணிவெடியைப் புதைத்துப் பேச, ஒன்றைக் கூட விடாமல் தேடிப்போய் பலியானார் டிரம்ப். வெற்றி ஐஸ்கிரீமை கமலா சுவைக்கும்போது மேலே செர்ரிப் பழமாக டெய்லர் ஸ்விப்டின் ஆதரவும் வந்து சேர்ந்தது.பைடன், டிரம்ப் விவாதத்தைவிட அதிகமான பார்வையாளர்கள் இந்த விவாதத்தைப் பார்த்திருக்கிறார்கள். 67 மில்லியன். டேவிட் முர், லின்ஸி டேவிஸ் மட்டுறுத்த மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது விவாதம்.
கமலா ஹாரிஸ் இந்த விவாதத்திற்கு முன்பாக மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டார். முதலாவதாக 40 சதவீத வாக்காளர்கள் துணை அதிபர் கமலாவைப் பற்றிப் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள். மிஷல், ஹலரி, நான்ஸி, ஒபாமா முதல் பில் கிளின்டன் வரை எல்லாரும் கமலாவைப் பற்றி நல்லதே சொன்னார்கள். ஆனால் கமலா யாரென்று நேரிடையாக விவாதத்தின் வழியாக அறிய விரும்பினர்.
இரண்டாவதாக முன்னாள் அதிபர் போல வசதியான பரம்பரைப் பணக்காரர் போல் அல்லாமல் ஒரு நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
Add Comment