25. யாரால்?
கடவுளைப் பற்றிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பொதுவாக ஒரே ஓர் அம்சம் தவிர மற்ற எதிலும் ஒத்துப் போக மாட்டார்கள். அந்த ஒத்துப் போகும் ஓரம்சம் – உருவமில்லை என்பது. உருவமில்லாத கடவுளுக்கு பிரம்மம் என்றும் அல்லா என்றும் தேவனென்றும் மதங்கள் தம் விருப்பப்படி பெயரிடுகின்றன. தென்படாத ஒன்று, உணரவும் இயலாத ஒன்று இல்லவேயில்லை; அல்லது பொருட்படுத்த வேண்டாம் என்று நாத்திக மதங்கள் தீர்ப்பெழுதும்.
அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் எப்படி எதிர்கொள்வது என்று முன்பே யோசித்து, முன்சொன்ன மதங்கள் ஆங்காங்கே கண்ணிவெடிகளைப் புதைத்து வைக்கும். உதாரணத்துக்கு இந்து மதத்தை எடுத்துக்கொள்வோம்.
சாம வேதத்தில் வருகிற ‘கேன உபநிடதம்’ (கேன என்ற சொல்லுக்கு ‘யாரால்?’ என்று பொருள்.) பிரம்மத்தைச் சுட்டிக்காட்டவே முடியாது என்று சொல்கிறது. பிரம்மம் சொல்லுக்கு அடங்காதது. ஆனால் அதிலிருந்துதான் சொல் பிறக்கிறது. மனத்தால் எட்டிப் பிடிக்க முடியாதது. ஆனால் அது மனத்தை அறியும். கண்ணால் அதைப் பார்க்க முடியாது. அதனால்தான் கண் பார்க்கிறது. அதன் ஒலியைக் காதுகள் உணரா. அதனால்தான் காதுகள் பிற ஒலிகளைக் கேட்கின்றன. பிராணனால் அது நடக்காது. எனவே பிராணன் நடக்கிறது.
Add Comment