உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ தரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்தத் தலைவர், அந்தக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த முதலமைச்சர் அவர்தான் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதனைத் தொட்டு வாரிசு அரசியல் என்கிற புராதனமான, முனை மழுங்கிய விமரிசனத்தை மீண்டும் முன்வைப்பதில் பொருளில்லை. மாறாக, இந்தப் பொறுப்புக்கு உதயநிதி தகுதியானவர்தானா என்று சிந்திக்கலாம்.
இந்திய ஜனநாயகத்தில் நேரு குடும்பத்தில் இல்லாத வாரிசு அரசியல் வேறு எந்தக் குடும்பத்திலும் இல்லை. ஆனால் இந்நாட்டுக்கு அக்குடும்பம் செய்த நல்லவற்றை (அல்லவையும் பல. அது தனி விவகாரம்.) வாரிசுகளற்ற வேறு யாரும் செய்ததில்லை என்பதை நினைவுகூரலாம். ஜனநாயக நாடானாலும் சரி, சர்வாதிகார நாடானாலும் சரி. ஒரு வாய்ப்பு இருக்குமானால் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி தந்து உயர்த்தும் நடைமுறை எங்கும் இருக்கிறது. நவீனகாலம் என்றில்லை; எக்கால அரசியலிலும் இது தவிர்க்க இயலாதது அல்லது யாரும் தவிர்க்க விரும்பாதது.
Add Comment