ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளிப்பட்ட கருத்து தான் கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜூன் சமீபத்தில் பேசிய பேச்சுகள் இரு கட்சியினரிடையே சலசலப்பை உருவாக்கின. “நேற்று வந்தவர். சினிமாவில் நடித்தவர். துணை முதல்வராக வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். எங்கள் தலைவர் பல்லாண்டு காலம் அரசியலில் இருக்கிறார். அவரை ஏன் துணை முதல்வராக்கக் கூடாது. வட தமிழகத்தில் விசிக வாக்கு வங்கியால் தான் திமுக வென்றது”. இப்படியான பேச்சுகளை ஆதவ் அர்ஜூன் போகிற போக்கில் எல்லாம் பேசிவிடவில்லை. திட்டமிட்டு ஊடகங்களில் பேசினார். அது பல மட்டங்களிலும் விவாதப் பொருளாக மாறியது.
2021ஆம் ஆண்டு விசிகவின் அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜூன் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் ஆறாண்டுகள் திமுகவின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. லாட்டரி தொழில் நடத்திவந்த மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் என்பதும் அவருக்கான சிறப்பு அடையாளம்.
Add Comment