120 வரும் போகும்
சுகுமாரனுக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது. அவன் தங்க இவன்தான் இடம் பார்த்துக்கொடுத்தான். க்ரியா திலீப்குமார் முதல் ஓவியர் அச்சுதன் கூடலூர் வரை பிரபஞ்சன் முருகேச பாண்டியன் என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கியிருந்த ஆகிவந்த இடமென்று இவன்தான் அவனை ஜானிஜான் கான் சாலையில் இருந்த மேன்சனுக்குக் கொண்டுபோய்விட்டான். மேற்குறிப்பிட்ட எல்லோருடனும் அவரவர் அறைகளில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறான் எனினும் சுகுமாரன் அறையில்தான் இவன் அதிக நேரம் செலவழித்திருந்தான். மூன்று வருடங்கள் கழித்து கனவா நிஜமா என்று தெளிவற்ற முடிவில்லா சுழற்சியில் இருக்கும் கதையின் நாயகன் தங்கியிருக்கும் அறையாக சுகுமாரன் இருந்த அறையைத்தான் கதையில் பயன்படுத்தப்போகிறான் என்பது இவனுக்கே அப்போது தெரியாது.
அறையை விட, நெடுநெடுவென இருந்த முருகேச பாண்டியனுடன் தெருக்களில் நடந்தே அலைந்ததுதான் அதிகம் என்று சொல்லவேண்டும்.
குனிந்து, அன்றைய தபாலில் சேர்க்கவேண்டிய காக்கி கலர் கவர்களின் மீது, துட்டியை மடித்துக்கொண்டபடி முகவரி எழுதுவதில் மும்முரமாக இருந்தவன், நிமிர்ந்ததும் எதிரில் முருகேச பாண்டியன் நின்றுகொண்டிருந்தான்.
Add Comment